சென்னையில், அனைத்து மண்டலங்களிலும் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசிடம், மாநகராட்சி அனுமதி கேட்டுள்ளது. இதன் வாயிலாக, தற்போது உள்ள துாய்மை பணியாளர்களை தவிர, வரும் காலங்களில் நிரந்தர பணியாளர் தேர்வு செய்ய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் தினம் 63 லட்சம் கிலோ குப்பையை மாநகராட்சி சேகரித்து வருகிறது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர் மண்டலங்கள், அம்பத்துார் மண்டலத்தில் சில பகுதிகளில் மட்டுமே குப்பை கையாளும் பணியில் மாநகராட்சி நேரடியாக செயல்பட்டு வருகிறது.அந்த வகையில், 4,000 நிரந்தர பணியாளர்கள் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இந்த மண்டலங்களை தவிர திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துாரில் பல பகுதிகள், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.இந்நிலையில், மாநகராட்சி நேரடியாக குப்பை கையாளும் மண்டலங்களில், துாய்மை பணியாளர்கள் முறையாக குப்பையை கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.குறிப்பாக, அண்ணா நகர் மண்டலத்தில் பெரும்பாலானோர் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள், துாய்மை பணியில் முறையாக ஈடுபடுவதில்லை என, அம்மண்டல கவுன்சிலர்கள், மேயர் பிரியாவிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது:'கவுன்சிலர்கள், அதிகாரிகள் வந்தாலும், துாய்மை பணியாளர்கள் வேலை பார்ப்பதில்லை. இதனால், குப்பை தொட்டிகள் நிரப்பி வழிகின்றன. அவர்களிடம் கேட்டால், 'வேண்டுமென்றால், எங்களுக்கு விடுமுறை போட்டுக்கொள்ளுங்கள்' என்கின்றனர்.இவர்கள் செய்யும் தவறால், பொதுமக்கள் எங்கள் மீது தான் அதிருப்தியில் உள்ளனர்.விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால், அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள நிரந்தர துாய்மை பணியாளர்களை மற்ற மண்டலங்களுக்கு மாற்றி, ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.அவர்களிடம், 'அண்ணா நகர் மண்டலத்தில் குப்பை கையாளும் பணி விரைவில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்' என, மேயர் பிரியா உறுதியளித்துள்ளார்.இதற்கிடையே, எஞ்சியுள்ள அனைத்து மண்டலங்களிலும் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க, மாநகராட்சி முடிவுசெய்துள்ளது. இதற்காக, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேகரிக்கும் குப்பையின் எடைக்கு ஏற்ப, அவர்களுக்கான தொகை விடுவிக்கப்படுகிறது.இதனால், தனியார் நிறுவன துாய்மை பணியாளர்கள், தினமும் குப்பையை சேகரித்து வருகின்றனர். மாநகராட்சி நிரந்தர பணியாளர்கள், குப்பை கையாள்வதில் சில குறைபாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.பல இடங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் குப்பை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.எனவே, அனைத்து மண்டலங்களிலும் குப்பை கையாளும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி விரைவில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மற்ற மண்டலங்கள், அடுத்தடுத்து தனியார் நிறுவனங்களிடம் அளிக்கப்படும்.தற்போது, 4,000 நிரந்தர துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்கள், ஓய்வுபெறும் வரை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பணியமர்த்தப்படுவர்.மற்றப்படி, புதிதாக எந்த துாய்மை பணியாளர்களையும் நிரந்தரமாக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்காது. அதேநேரம், தொடர்ந்து துாய்மை பணிகளில் மெத்தனமாக இருக்கும் நிரந்தர துாய்மை பணியாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.தங்கள் பகுதிக்கு, இரண்டு நாட்களுக்கு மேல் குப்பை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வார்டு, மண்டல அலுவலகங்கள் அல்லது '1913' என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அடையாறு மண்டலம், திருவள்ளுவர் நகர் மற்றும் இரண்டாவது அவென்யூ பகுதியில் நடந்து வரும் சாலை சீரமைப்பு மற்றும் நடைபாதை பணியை, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார்.அவர் அளித்த பேட்டி:பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குப்பை கொட்டப்படுகிறது. மற்ற இடங்களில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டு உள்ளது.மாநகராட்சியில் குப்பை அகற்றுவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இது நம் குப்பை என்பதையும், இதற்காக மாநகராட்சியால் பல்வேறு நிலையில் பணியாளர்கள், அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.பொதுமக்களால் குப்பை உருவாவதை குறைக்க முடியும். குப்பையை முறையாக தரம் பிரித்து கொடுப்பதுடன், குப்பை தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -