சென்னை:வடசென்னையின் போக்குவரத்துக்கு உதவும் பிரதான சாலையாக, ஜி.என்.டி., சாலை உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள், பாரிமுனை, அண்ணா சாலை, சென்ட்ரல், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்துகின்றன.இதில், அதிகாலை முதல் நள்ளிரவு தாண்டியும், போக்குவரத்து நடமாட்டம் இருக்கும். இச்சாலையில் வியாசர்பாடி அருகே, குடிநீர் குழாய் இணைப்பு போடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன், பள்ளம் தோண்டப்பட்டது.இதற்காக பல நாட்கள் சாலையில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டது. சமீபத்தில், தடுப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், சாலையை சீரமைக்கவில்லை. இதனால், 50 மீட்டர் அளவிற்கு சாலை சேதம் அடைந்துள்ளது.பள்ளமும், மேடுமாக உள்ள சாலையில், வாகனங்கள் தள்ளாடியபடியே பயணித்து வருகின்றன. இதுபோன்ற சாலைகள் குறித்து புகார் அளிப்பதற்கு 'நம்ம சாலை' என்ற செயலியை நெடுஞ்சாலைத்துறை அறிமுகம் செய்துள்ளது.இதில், புகார் அளித்தால், 24 மணிநேரத்தில் சீரமைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இப்பகுதி வியாபாரிகள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும், செயலியில் புகார் அளித்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், சாலையில் விபத்து அபாயம் தொடர்ந்து வருகிறது.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இப்போது தான், தேர்தலுக்கு முன்பாக சாலையை சீரமைத்தோம்; மீண்டும் சீரமைப்பதற்கு பராமரிப்பு நிதி இல்லை. சட்டசபையில் புதிதாக நிதி ஒதுக்கிய பின்தான் சாலையை சீரமைக்க முடியும்' என்றனர்.