ஆவடி: நண்பரின் 1.50 கோடி ரூபாய் இடத்தை ஆள்மாறாட்டம் செய்து விற்ற நபரை, போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர், 52. இவருக்கு வந்தவாசியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. தொழில் முறையில் பழக்கமான இம்மானுவேல் என்பவர், அந்த நிலத்தை கொடுத்தால், திருமழிசை, கிரேஸ் நகரில் தன் நண்பர் இன்பரசனின் இரண்டு மனைகளை, கிரையம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். அதன்படி, ஒரு ஏக்கர் நிலத்தை இம்மானுவேலுக்கு 2015ல், சேகர் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக, இன்பரசனின் நிலத்தை இம்மானுவேல், சேகருக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கிடையே இன்பரசன் இறந்து விட்டார். இந்நிலையில், தன் கணவர் பெயரில் இருந்த நிலத்தை, அவரது நண்பர் இம்மானுவேல் மோசடி செய்து விற்றதாகவும், அந்த ஆவணங்களை ரத்து செய்யுமாறும், இன்பரசன் மனைவி, கிண்டி பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்; அதனர்படி ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், 2024ல், சே கர் மேற்படி நிலத்தில் வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது, இம்மானுவேல் ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை விற்று மோசடி செய்தது தெரிந்தது. எனவே, தன்னுடைய நிலம் மற்றும் நிலம் வாங்க செலவு செய்த 1.50 கோடி ரூபாய் திரும்ப பெற்று தருமாறு, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், தலைமறைவாக இருந்த திருமழிசை சேர்ந்த இம்மானுவேல், 55 என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.