சென்னை, ''சென்னை மாநகராட்சியில், மாடுகள் வளர்ப்பது சாத்தியமில்லாதது. இனி, இரண்டு முறைக்கு மேல் சாலைகளில் விடப்பட்டால், மாடு திரும்ப உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படாது. இது தான், மாடுகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ஒரே வழி,'' என, கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wulziprg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை, நங்கநல்லுார், எஸ்.பி.ஐ., காலனி பிரதான சாலையைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 61. மத்திய அரசு முன்னாள் ஊழியர்.இவர் நேற்று முன்தினம் மாலை, மாடுகள் முட்டியதால், சம்பவ இடத்திலேயே குடல் சரிந்து இறந்தார்.இதையடுத்து நேற்று காலை, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், சம்பவ இடத்திற்குச் சென்று நடந்தவை குறித்து கேட்டறிந்தார்.இதையடுத்து, நங்கநல்லுார் பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பிடித்து வந்தனர். அவற்றை, கமிஷனர் பார்வையிட்டார்.அங்கிருந்த மாட்டு உரிமையாளர்கள் சிலர், 'மாடுகளை பிடிக்கக் கூடாது; வளர்க்க இடம் தாருங்கள்' எனக் கூறி, கமிஷனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, ''உரிய இடம் இல்லாமல் மாடுகளை வளர்க்கக் கூடாது. பலியானவர் குடும்பத்தினர் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர். பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் பதில் கூறுவீர்களா,'' என்றார்.பின், பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:நங்கநல்லுாரைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற முன்னாள் மத்திய அரசு ஊழியர், மாடுகள் முட்டி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பிரேத பரிசோதனைக்குப் பின், அவரின் இறப்பிற்கான முழு விபரம் தெரியவரும்.சம்பவம் நிகழ்ந்த இடத்தில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைக்கவில்லை. ஆனால், நேரில் பார்த்த சிலரிடம் கேட்டு அறிந்து கொண்டோம்.இதுபோன்ற சம்பவங்கள், நங்கநல்லுாரில் மட்டுமல்லாமல் திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளன.சென்னை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்படுகின்றன. சட்டப்படி எந்த ஒரு தொழிலையும் முழுமையாக நிறுத்த முடியாது.நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு, நகர்ப்புறத்தில் உள்ள விலங்குகள், பறவைகள் சட்டத்தின் கீழ், 'எங்களுக்கு சில அனுமதிகள் வழங்க வேண்டும்' எனக் கோரினோம். அதன்படி, அபராத தொகை உயர்த்தப்பட்டது.மாடு பிடிபடும் முதல் முறை 5,000 ரூபாய்; இரண்டாம் முறை 10,000 ரூபாய் என அபராதம் விதித்தோம். அந்த வகையில், கடந்தாண்டு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.மாட்டு உரிமையாளர்கள் அபராதத் தொகை செலுத்தி, கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், மீண்டும் அதே தவறை செய்கின்றனர்.மாநகராட்சி வாகனம் வரும் போது மாடுகளை பாதுகாப்பாக பிடித்து வைத்து, வாகனம் சென்ற பின் சாலையில் திரிய விடுகின்றனர். சந்திரசேகர் இறப்பு சம்பவத்திற்குப் பின், 16 மாடுகள் பிடிபட்டுள்ளன. கால்நடைகளை பராமரிக்க, குறைந்தபட்சம் 36 அடி இடமாவது இருக்க வேண்டும். அதன் பின் தான் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அந்த வசதிகள் எதுவும் இல்லாமல் மாடுகளை வளர்க்கின்றனர். சென்னை மாநகராட்சியில் மாடுகள் வளர்ப்பது என்பது இனி சாத்தியமில்லாதது. நங்கநல்லுாரில் மட்டும், 200 மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மாடு வளர்ப்போர் வழிமுறை தவறுவதால், அடிக்கடி உயிர்பலிகள் ஏற்பட்டு வருகின்றன.இனி, இரண்டாவது முறைக்கு மேல் மாடு பிடிபட்டால், அதன் உரிமையாளர்கள் மாட்டிற்கான உரிமையை இழந்துவிடுவர். மாடுகள் மாநகராட்சிக்கு சொந்தமாகிவிடும். மாடுகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, இது தான் ஒரே வழி.இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, உரிமையாளர் மீது காவல் துறையில் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
குதிரைகளை மீட்க கோரிக்கை
செங்குன்றம், ஜி.என்.டி., சாலை மற்றும் அதையொட்டிய தெருக்களில், பராமரிப்பற்று விடப்பட்ட இரண்டு குதிரைகள் மற்றும் குட்டி சுற்றித்திரிகின்றன. உணவிற்காக அலையும் குதிரைகள், வேகமாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு அவ்வப்போது காயமடைகின்றன.இந்த நிலையில், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் அருகே திரிந்த குதிரையின் மூக்கில், நேற்று கஞ்சா போதை நபர்கள் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பலத்த காயமடைந்த குதிரை, ரத்தம் சிந்திய நிலையில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது.இதைக்கண்ட சிலர், 'புளூ கிராஸ்' அமைப்பிற்கு, மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த அமைப்பினரோ, 'ஆன்லைனில்' புகார் பதிவு செய்தால் மட்டுமே, ஆட்கள் வருவர் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு, சிலர், செங்குன்றம் போக்குவரத்து போலீசாரிடம் நேரில் சென்று கூறி உள்ளனர். நேற்று மாலை வரை, பலத்த காயத்தின் வலியாலும், பசியாலும், எதையும் சாப்பிட முடியாமல் அக்குதிரை சோர்ந்து நின்றிருந்தது.
4,237 மாடுகள் பிடித்து
ரூ.92 லட்சம் அபராதம்சென்னையில் கடந்த ஓராண்டில், சாலையில் சுற்றித்திரிந்த 4,237 மாடுகள் பிடிக்கப்பட்டு, 92.63 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்தாண்டில், 4,237 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, 92.63 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டில், எட்டு நாட்களில் 42 மாடுகள் பிடிக்கப்பட்டு, 75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நங்கநல்லுாரில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று அதே பகுதியில் 10 மாடுகள், மற்ற பகுதிகளில் நான்கு என, 14 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.