சென்னை: ம.பி., மாநிலத்தில் நடந்த தென்மேற்கு மண்டல பல்கலை இடையிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர்கள், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இந்திய ஜூடோ கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஏ.ஜி.இ., பல்கலை சார்பில், ஆண்களுக்கான தென்மேற்கு மண்டல பல்கலை ஜூடோ சாம்பியன்ஷிப் - 2025 போட்டி, ம.பி., மாநிலத்தின் எஸ்.ஏ.ஜி.இ., பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில் 100க்கும் அதிகமான பல்கலைகளின் வீரர்கள் பங்கேற்றனர். 40 முதல் 100 கிலோ என, பல்வேறு எடை பிரிவுகளில் போட்டி நடந்தது. இதன் ஆண்களில், 60 கிலோவுக்கு உட்பட்டோர் பிரிவில், தமிழகத்தில் இருந்து போட்டியிட்ட சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ஆகாஷ்ராஜ், 21, தங்கம் கைப்பற்றினார். அதேபோல் 70 கிலோவுக்கு உட்பட்டோர் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ஈஸ்வரமூர்த்தி, 20, 100 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ஸ்ரீமன், 23, ஆகியோர், தலா ஒரு வெள்ளி வென்றனர். போட்டிகள் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்கள், ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தினர்.