சென்னை: ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, 'அமெதிஸ்ட்' உணவகம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தில், 'கான்ட்ராஸ்ட் அண்ட் காம்ப்ளிமென்ட்' எனும் தலைப்பில், புகைப்படக் கண்காட்சி நேற்று துவங்கியது. புகைப் படக் கலைஞரும், டாக்டருமான சீனிவாசன் பெரியதிருவடி, 'மலைகள் மற்றும் முகில்' எனும் பெயரில், பல ஆண்டுகளாக தான் சேகரித்த, 'டிஜிட்டல் கருப்பு - வெள்ளை' புகைப்படங்களை காட்சிப்படுத்தியுள்ளார். அதேபோல், புகைப் படக் கலைஞர், ஜயானந்த் கோவிந்தராஜ், 'பேர்ஸ்' அதாவது ஜோடிகள் எனும் பெயரில், 20 ஆண்டுகளாக, சென்னை, கனடா, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகளில், தான் சேகரித்த புகைப்படங்களை காட்சிப்படுத்தியுள்ளார். இது குறித்து, புகைப்படக் கலைஞர் சீனிவாசன் பெரியதிருவடி கூ றியதாவது: எனக்கு 11 வயது முதலே, புகைப்படம் எடுப்பதில் ஈடுபாடு அ திகம். பல ஆண்டுகளாக டாக்டராக பணிபுரிந்தேன். அதன் பின், புகைப்படத் துறையில் அலாதியான ஈர்ப்பு ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளாக, முழுநேரமும் புகைப்படத் துறையில் பயணிக்க துவங்கிவிட்டேன். இந்த புகைப்படங்களை பிற இடங்களில் அச்சிட்டால், அதன் தத்ரூபம் குறையும் என்பதால், நானே அச்சிட்டு வெளியிடுகிறேன். பல நாட்கள், பல்லாயிரம் கி.மீ., பிரயாணம் செய்து, இயற்கை செரிந்த மலைகளை காண்கிறேன். அந்த அனுபவத்தை பிறரும் பெற வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து இவற்றை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த புகைப்பட கண்காட்சி மற்றும் விற்பனை, நாளை வரை நடக்கிறது. காலை 10:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.