சென்னை:லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பர பேனர், போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர், ராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், அரசியல் கட்சியினர் சாலைகள் மற்றும் ராயபுரம், மின்ட் மேம்பால சுவர்களில் ஒட்டியுள்ள அரசியல் போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து துாய்மைப்படுத்தினர். மேலும், 30க்கும் மேற்பட்ட இடங்களில், சுவர்களில் உள்ள கட்சி விளம்பரங்கள் பெயின்டால் அழித்து வருகின்றனர். மேலும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், கட்சி கொடிகளும், அரசியல் கட்சி பேனர்களையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.ஆனால், புறநகர் பகுதிகளில், அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. செங்குன்றம் சுற்றுவட்டாரங்களில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சியும், பொன்னேரி வருவாய்த் துறையினரும் கண்டு கொள்ளவில்லை. ↓சென்னை மாநகராட்சியின் மாதவரம், அம்பத்துார் மண்டலங்களிலும், ஆங்காங்கே ஒட்டப்பட்ட, அரசியல் கட்சிகளின் பல்வேறு விளம்பர போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளன. அங்கும் வருவாய்த்துறையினர், தேர்தல் விதியை கடை பிடிக்காமல் அலட்சியமாக உள்ளனர்.அதேநேரம், ஓட்டுக்கு பணம் மற்றும் மது தருவதை கட்டுப்படுத்தும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கேற்ப மாதவரம், புழல், பெரம்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே சோதனை முழுவீச்சில் துவக்கப்பட்டுள்ளது. ↓திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து பயணியர் நிழற்குடைகளில் இடம்பெற்றுள்ள அரசு விளம்பரங்கள், சுவர் விளம்பரங்களை மறைக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆவடி மாநகராட்சி
தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில், ஆவடி முழுக்க 4,000 போஸ்டர்கள், 300க்கும் மேற்பட்ட கட்சி பேனர்கள் மற்றும் 50 இடங்களில் எழுதப்பட்ட கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.