உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.1.50 கோடி தங்க பிஸ்கட் விவகாரம் பூதாகரம் லாக்கர் நகைகள் என தெரிந்ததால் கடும் பீதி பிடிபட்ட பெண் மாஜி மேலாளர் என்பதால் பகீர்

 ரூ.1.50 கோடி தங்க பிஸ்கட் விவகாரம் பூதாகரம் லாக்கர் நகைகள் என தெரிந்ததால் கடும் பீதி பிடிபட்ட பெண் மாஜி மேலாளர் என்பதால் பகீர்

சென்னை: வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள நகையை விட்டு சென்ற பெண், அதே வங்கியில் பணிபுரிந்த மேலாளர் என, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தவிர, கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட் மற்றும் நகைகள், வாடிக்கையாளர்களின் லாக்கரில் இருந்து திருடியவை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த வாடிக்கையாளர்கள், தங்கள் நகைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என அறிய, வங்கிக்கு படையெடுக்கின்றனர். வேளச்சேரி விரைவு சாலையில், தனியார் வங்கி உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி, பர்தா அணிந்து வந்த பெண், தன் கைப்பையை விட்டுச்சென்றார். அதில் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க பிஸ்கட் மற்றும் நகைகள் இருந்தன. வங்கி மேலாளர் அகமது கத்தேரி, இப்பையை திறந்து சோதித்த பின், தங்க பிஸ்கட் விட்டுச்சென்ற பெண் குறித்து கண்டறிய வேண்டும் என, நேற்று முன்தினம் வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், வங்கியில் தங்க பிஸ்கட் பையை விட்டுச்சென்றது, வேளச்சேரி காந்தி நகரைச் சேர்ந்த பத்மபிரியா, 40, என்பது தெரிந்தது. இதே வங்கியில் மேலாளராக பணிபுரிந்த இவர், கையாடல் வழக்கில் கைதாகி, சமீபத்தில் வெளியே வந்ததும் தெரிந்தது. தங்க பிஸ்கட் அடங்கிய பையை, அப்பெண் வங்கியில் விட்டுச்சென்றது குறித்து, போலீசார் கூறியதாவது: இதே வங்கியில் மேலாளராக பணிபுரிந்த பத்மபிரியா, வெளிநாட்டில் வசிக்கும் வாடிக்கையாளர்களின் லாக்கரில் இருந்த நகைகளை திருடி, அதை உருக்கி விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக, லாக்கர் உரிமையாளர் ஒருவர் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த செப்டம்பரில் பத்மபிரியா கைது செய்யப்பட்டார்; உடனே 'சஸ்பெண்ட்'டும் செய்யப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன், ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், அதே வங்கிக்கு மீண்டும் சென்றுள்ளார். அங்குள்ள ஊழியர்கள் யாரும் தன்னை பார்க்கக்கூடாது என்பதற்காக, 'பர்தா' அணிந்து சென்றுள்ளார். அவர் எடுத்துச் சென்ற பையில் இருந்த தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகள், அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானவை. பத்மப்ரியா மேலாளராக பணிபுரிந்த காலத்தில், வெளிநாட்டில் வசிக்கும் வாடிக்கையாளர்களின் லாக்கரில் எடுத்த நகைகள் அவை. தற்போது, பணியில் இல்லாத தன்னால் மீண்டும் லாக்கரில் வைக்க முடியாது என்பதால், வங்கியில் விட்டுச்சென்றுள்ளார். இந்த நகைகள் மாயம் குறித்து, மற்றொரு வழக்கு பதியப்பட்டால், மீண்டும் சிறை செல்ல நேரிடுமோ என, அவர் பயந்துள்ளார். கணவர் செய்து வந்த தொழிலில் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த கடனை அடைப்பதற்காக பத்மபிரியா, வாடிக்கையாளர்களின் லாக்கரில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். வங்கி லாக்கரில் இருந்து தங்க பிஸ்கட் மற்றும் நகைகள் திருடு போனது தொடர்பாக, போலீசில் புகார் அளிக்க, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபோல், எத்தனை லாக்கர்களில் பணம், நகைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை பத்மபிரியா திருடியுள்ளார்; வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை கையாடல் செய்துள்ளாரா எனவும், போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கி ஆவணங்களை வைத்து, ஒவ்வொரு லாக்கரிலும் வங்கி நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. வங்கிக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள் வேளச்சேரியில் உள்ள இந்த வங்கியில், நுாற்றுக்கணக்கான லாக்கர்கள் உள்ளன. இதற்கு உரிய கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்ற வாடிக்கையாளர்கள், அவர்களுக்கு சொந்தமான பொருட்களை பாதுகாக்கின்றனர். லாக்கரில் இருந்து தங்க பிஸ்கட் மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தால் பயந்துபோன வாடிக்கையாளர்கள், தங்கள் லாக்கரை பார்வையிட, வங்கிக்கு படையெடுக்கின்றனர். வங்கி கணக்கில் 'டிபாசிட்' தொகை மற்றும் சேமித்து வைத்துள்ள பணம் இருக்கிறதா என்பதை அறிய பலரும் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி