| ADDED : ஜூலை 25, 2011 09:45 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு சம்பளம் குறைவாக கிடைப்பதால், பணிக்கு வர மறுக்கின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் காலி பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. மருத்துவமனை பணியாளர்களின் 18 பணியிடங்களில், 9 பணியிடங்களும். 12 துப்புரவு பணியாளர்களின் பணியிடங்களில், ஒன்பது பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மருத்துவமனை பணியாளர்களின் பற்றாக்குறை இருப்பதால், மருத்துவமனையில் சரியாக பணிகள் நடப்பதில்லை என்பதற்காக, தினக்கூலி பணியாளர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பணியாளர்கள் கூறியதாவது: வெளியில் இருந்து பணியாளர்களுக்கு தினமும் 30 முதல் 50 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மருத்துவமனையை சுத்தம் செய்தல், பொது கழிப்பிடம், ஆண், பெண் வார்டுகளில் இருக்கும் கழிப்பிடங்கள் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை செய்ய வேண்டியதுள்ளது. ஆனால், பணிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுவதில்லை. தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இந்த சம்பளம் மிகவும் குறைவானதாக உள்ளது. மற்ற கூலி வேலைகளுக்கு சென்றால் கூட தினமும் 200 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க முடிகிறது என்றனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தினக்கூலி பணியாளர்களாக ஐந்து பேர் வேலை செய்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வழங்கும் சம்பளம் குறைவாக இருப்பதால், பணிக்கு சரியாக வருவதில்லை. எனவே, அவர்களுக்கு வழங்கும் சம்பளம் அதிகரிக்க கோரி மேலதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.