உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.75 லட்சம் நிதியில் புனரமைக்கப்பட்ட... பூங்கா புதரானது!உள்ளே குப்பை பிரிப்பு; வெளியே பார்க்கிங்

ரூ.75 லட்சம் நிதியில் புனரமைக்கப்பட்ட... பூங்கா புதரானது!உள்ளே குப்பை பிரிப்பு; வெளியே பார்க்கிங்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி கந்தசாமி பூங்கா போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. பூங்காவை புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நகர மக்கள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மரப்பேட்டை பகுதியில் கந்தசாமி பூங்கா உள்ளது. பராமரிப்பின்றி விஷ பூச்சிகளின் நடமாடும் பகுதியாக மாறியதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.இதையடுத்து, கடந்த, 2014ம் ஆண்டுக்கு முன், சுற்றுலா வளர்ச்சி நிதி, 25 லட்சம் ரூபாய்; பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நிதி, 25 லட்சம்; நகராட்சி நிதி, 25லட்சம் ரூபாய் என, மொத்தம், 75 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.இரண்டரை ஏக்கர் பரப்பில் உள்ள பூங்காவில், நடைபாதை, மின்னொளி, இருக்கை, அழகிய தாவர செடிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பூங்காவுக்கு அதிகளவு பொதுமக்கள் வந்து சென்றனர். காலை நேர 'வாக்கிங்' செல்லவும் பயன்படுத்தப்பட்டது. ஐந்து ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

குப்பை குடோன்

கொரோனா ஊரடங்கின் போது, பூங்கா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. அதன்பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், குப்பை தரம் பிரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது, பூங்கா போதிய பராமரிப்பின்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்ட சிமென்ட் கம்பம், நீருற்று, விலங்குகள் போன்றவை சிதிலமடைந்து காணப்படுகின்றன. புதர் வளர்ந்து, காடு போல பூங்கா காட்சியளிக்கிறது. பூங்கா பூட்டியே கிடப்பதால் அதன் முகப்பு பகுதி வாகனங்கள் நிறுத்தப்பகுதியாக மாறியுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா, தற்போது குப்பை பிரிக்கும் இடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பாழாகும் உபகரணங்கள்

பொதுமக்கள் கூறியதாவது: கந்தசாமி பூங்கா முதலில், வனவிலங்குகள் பூங்காவாக இருந்தது. இங்கு விலங்குளும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததால், பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. இங்கு இருந்த வனவிலங்குகள் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டன. அதன்பின்னர், பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பூங்கா புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. தற்போது, மீண்டும் பூங்கா பராமரிப்பின்றி சிதிலமடைந்து, யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது.குழந்தைகள் விளையாடி மகிழும் விளையாட்டு உபகரணங்களும் வீணாகும் சூழல் உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து வார்டு கவுன்சிலரிடம் முறையிட்டோம். அவரும், 'நகராட்சியில் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். காலம் தாழ்த்தாமல், பூங்காவை புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், 'வாக்கிங்' செல்வோருக்கும், குழந்தைகளுக்கும் பயனாக இருக்கும்.இவ்வாறு, கூறினர்.

நிதி பெற முயற்சி தேவை!

நகராட்சிக்கு சொந்தமான கந்தசாமி பூங்கா, ஒரு ஆண்டுக்கு முன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின், 4 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியுடன் சுற்றுச்சுவர் பராமரிக்கப்பட்டது.தொடர்ந்து, தன்னார்வலர்கள், நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதி கொடுத்தால் பூங்கா முழுவதும் பராமரிக்கலாம் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான முயற்சிகளை நகராட்சி எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை