| ADDED : மே 07, 2024 12:30 AM
கோவை;பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டத்துக்குள் தனியார் பஸ் புகுந்ததில், ஐந்து பேர் காயம் அடைந்தனர்.கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பயணிகள் சென்று வருகின்றனர். இதனால், அங்கு கூட்டம் அதிகளவில் இருக்கும். நேற்றும் வழக்கம் போல் அதிகளவில் கூட்டம் இருந்தது. அதிகாலை 5:30 மணிக்கு கணுவாயில் இருந்து சிங்காநல்லூர் வழியாக செல்லும் தனியார் டவுன் பஸ் ஒன்று, பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழைந்தது. அப்போது அங்கிருந்த வேகத்தடை மீது ஏறி, இறங்கிய போது பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அங்கு நின்றிருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. பயணிகள் மீது மோதிய பின் தனியார் பஸ் முன்னால் நின்றிருந்த கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதி நின்றது.இதில் பஸ் ஸ்டாண்டில், நின்றிருந்த முருகேசன், 50 என்பவரின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இவருடன் மேலும், ஒன்பது பேருக்கு சிறு காயம் ஏற்பட்டது. பஸ் விபத்தில் சிக்கியதும் கண்டக்டர்கள் பஸ்சில் இருந்து இறங்கி சென்று விட்டனர். இதையடுத்து தனியார் பஸ் டிரைவரை பயணிகள் மறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் காயமடைந்தவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து டிரைவர் சஞ்சீவ், 26 மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.