வீணாகும் குடிநீர்
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால், ரோடும் பாதிக்கப்படுகிறது. இதை சரிசெய்ய நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை. குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, சின்னவீரம்பட்டி ரோட்டோரத்தில் குப்பைக்கழிவுகளை வைத்து எரிக்கின்றனர். காற்று பலமாக இருப்பதால், கழிவுகளிலிருந்து தீப்பொறிகளும் பறந்து வருகின்றன. மேலும், ரோட்டில் புகை மண்டலமாக மாறி எதிரே வரும் வாகனங்களும் தெரியாத வகையில் பரவுகிறது. வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.- மூர்த்தி, உடுமலை. போக்குவரத்து நெரிசல்
உடுமலை சீனிவாசா வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சிறிய வாகனங்களும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகின்றன. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மகாலட்சுமி, உடுமலை. பள்ளத்தில் தேங்கும் நீர்
உடுமலை நகராட்சி 22வது வார்டு, காந்திசவுக் செல்லமுத்து வீதியில் ரோடு போடப்பட்டது. அதில் சரிவர போடாதால், அங்கு பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை நகராட்சியினர் சரி செய்ய வேண்டும்.- கார்த்திகேயன், உடுமலை. தண்ணீர் தேக்கம்
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரை முன் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முத்து, போடிபட்டி. குப்பை தேக்கம்
தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் முன், கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மடத்துக்குளம் பேரூராட்சியினர் அங்கு கொட்டப்படும் குப்பையை அகற்ற வேண்டும்.- கருப்பசாமி, உடுமலை. பராமரிக்க வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்டில், இலவச கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி அதை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இலவச கழிப்பிடத்தை பராமரித்து சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவகுமார், உடுமலை. விழும் நிலையில் மரம்
பொள்ளாச்சி, சந்தைப்பேட்டை பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மரம் சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் வாய்ப்புள்ளது. இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் மக்கள் அச்சத்துடன் இருப்பதால் மரத்தை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ஷங்கர் ஹரி, ஜமீன்ஊத்துக்குளி. அதிக பாரம் ஆபத்தானது
பொள்ளாச்சி, நா.மு.சுங்கம் ரோட்டில் செல்லும் வாகனத்தில் விதியை மீறி அதிகளவு பாரம் ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் வாகனத்தில் உள்ள மரத்துண்டுகள் மின் கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மரத்துண்டுகள் ரோட்டில் விழுவதால், மற்ற வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது.-- -ஆனந்த், பொள்ளாச்சி. ரோட்டில் மழை நீர்
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் அருகே ரோட்டின் ஓரத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால், இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி மழை நீர் தேங்கும் இடத்தை சரி செய்ய வேண்டும்.- -கதிர், கோவில்பாளையம். சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி, நியூஸ் ஸ்கீம் ரோட்டில் ஆங்கங்கே சேதமடைந்து குழியாக இருப்பதால் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -முரளி, பொள்ளாச்சி. ரோட்டோரத்தில் மின்கம்பம்
செங்குட்டைபாளையம் அரசு பள்ளி அருகே ரோட்டின் ஓரத்தில் மின் கம்பங்கள் பயனற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் துருபிடித்து சேதம் அடைவதற்குள் மின் வாரிய அதிகாரிகள் இதை கவனித்து விரைவில் அகற்ற வேண்டும்.-- -கிருஷ்ணா, நெகமம்.