| ADDED : ஜூன் 24, 2024 10:34 PM
பெ.நா.பாளையம்:ஆட்டு புழுக்கையை உடனடியாக பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். இயற்கை வேளாண்மையில் ஆட்டு எரு முக்கியத்துவம் வாய்ந்தது என, முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தி உள்ளனர்.ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து மண்ணின் நயத்தை உயர்த்துகிறது. பயிர்கள் நன்கு வேர் பிடித்து வளர்வதற்கும், நீரை தக்க வைத்துக் கொள்வதற்கும் காரணமாக உள்ளது. ஆட்டு எருவானது புழுக்கைகளாக இருப்பதால், எருவை சேகரிப்பதும், பயன்படுத்துவதும் எளிது. விரைவாக மக்கிவிடும். ஆட்டுக் புழுக்கைளில் ஈரத்தன்மை குறைவாக இருப்பதாலும், துர்நாற்றம் இல்லாமல் இருப்பதாலும், கையாளுவது எளிது. ஆட்டு எருவை பூச்செடிகள், மூலிகை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் பழ மரங்களுக்கும் உரமாக பயன்படுத்தலாம். மாடித்தோட்டம் அமைப்போருக்கு, ஆட்டு எரு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டின் இனம் மற்றும் அவை உட்கொள்ளும் தீவனத்தை பொறுத்து இருக்கும். எனவே, ஆடுகளுக்கு புரதச்சத்து மிகுந்த தீவனப் பயிர்களான வேலி மசால், தீவன தட்டை பயிறு, சுபா புல் ஆகியவற்றை அளிக்கலாம்.ஆட்டு எருவை நேரடியாக பயன்படுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு வெயிலில் நன்கு உலர வைத்து பயன்படுத்துவது நல்லது. இதனால் நோய்களை பரப்பக்கூடிய கிருமிகள் இருப்பின், அவை சூரிய ஒளியில் அழிக்கப்பட்டு விடும். காய வைத்த ஆட்டு எருவினை பிற்கால தேவைக்கு சேமித்தும் வைத்துக் கொள்ளலாம் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.