| ADDED : மார் 24, 2024 11:51 PM
சூலுார்;சூலுார், கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், 100 சதவீத ஓட்டளிக்க கோரி, விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன.லோக்சபா தேர்தல் வரும், 19 ம்தேதி நடக்கிறது. தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் ஒரு பக்கம் தீவிரமாக நடத்தப்படுகிறது. விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், கோலம் வரைந்து விழிப்புணர்வு, பெட்ரோல் பங்க்கில் பிரசாரம், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சூலுார், கருமத்தம்பட்டி, செலக்கரச்சல், வாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாரிகள் நடத்தினர். 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, ஓட்டளிப்பது ஒவ்வொருவரின் உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும் என்ற வாசகங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி அலுவலர்கள் பிரசாரம் செய்தனர்.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் ஓட்டளிக்க செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து மக்களிடையே விளக்கி வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், 2.11 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர். தற்போது, 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 803 வாக்காளர்கள் சூலுார் தொகுதியில் உள்ளனர். அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தி தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம், என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.