| ADDED : ஜூன் 11, 2024 12:04 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சர்வீஸ் ரோடு வழியாக பஸ் இயக்காமல், மேம்பாலத்தில் செல்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி - கோவை ரோட்டில், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு பகுதியில் கல்லாங்காட்டுபுதுார் முதல் அரசம்பாளையம் பிரிவு வரை மேம்பாலம் கட்டப்பட்டது.பொள்ளாச்சி, கோவையில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மதியவேளையில் கிணத்துக்கடவில் உள்ள பஸ் ஸ்டாண்டு மற்றும் பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் நிறுத்தப்படுவதில்லை.மாறாக, மேம்பாலத்தின் வழியே செல்கின்றனர். இதனால் பயணியர் பஸ் வரும் என, நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவில் பஸ் நிற்க ஸ்டேஜ் இருந்தும், போக்குவரத்து விதியை காற்றில் பறக்க விட்டு, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் செயல்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை பஸ் பயணியர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.வழக்கம் போல் பஸ்கள் விதிமீறி இயக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதில், பொள்ளாச்சி அல்லது கோவையில் பயணியர் பஸ் ஏறிய பின், கிணத்துக்கடவுக்கு டிக்கெட் கேட்டால் தர மறுக்கின்றனர். பஸ் கிணத்துக்கடவு செல்லாது என பதில் கூறுகின்றனர்.மேலும், மேம்பாலம் துவங்கும் இடத்திலோ அல்லது முடியும் இடத்திலோ பஸ் நிற்கும் என தெரிவிக்கின்றனர்.இதை மாற்றி, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் பஸ் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என, பஸ் பயணியர் தெரிவித்தனர்.