கோவை;மாநகராட்சி பகுதிகளில் 'மியாவாக்கி' முறையில் அடர்வன காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பராமரித்து பசுமை பரப்பை அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.கோவை மாநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப, மேம் பாலம், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. கான்கிரீட் கட்டுமானங்கள் அதிகரிப்பு, விளை நிலங்கள் குடியிருப்புகளாக மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் பசுமை பரப்பு குறைந்து வருகிறது.இதனால், புவி வெப்பமயமாதல், பருவ மழை பொய்த்து போதல் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண, அதிக மரங்களை நடுவதுடன், நீர் நிலைகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது.இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு, 100 வார்டுகளிலும் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் 'மியாவாக்கி' முறையில் மரங்கள் நடப்பட்டன. நல்ல காற்று, இயற்கையான சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்ட குறுங்காடுகள், சரியாக பராமரிக்கப்படாததால் புதர்மண்டி கிடக்கின்றன.இப்படியிருக்க, மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் 'மியாவாக்கி' முறையில் அடர்வன காடுகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, அமைக்கப்பட்ட இடங்களை நன்கு பராமரித்திருந்தால் பசுமை காரணமாக மழை பொழியவும் வாய்ப்பாக அமைந்திருக்கும். காந்திபுரம் மேம்பாலம் உட்பட பல்வேறு மேம்பாலங்களின் அடிப்பகுதியில் காலியாக உள்ள இடங்களை பசுமையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இனி அமையும் அடர்வன காடுகள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்க சூழல் ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. அமைத்ததோடு சரி!
கவுன்சிலர்கள் கூறுகையில், 'மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்'களில், 2022ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மியாவாக்கி முறையில் மரங்கள் நடப்பட்டன. அதன்பிறகு அவை பராமரிக்கப்படாததால் புதர் மண்டி அழிந்தே போயின. இப்படியிருக்க ரூ.3 கோடியில் ஐந்து மண்டலங்களிலும் அடர்வன காடுகள் அமைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவற்றை தொடர்ந்து பராமரித்து பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும். இல்லையேல், நிதி வீணாவதுடன், சூழல் சார்ந்த பாதிப்புகளும் அதிகரிக்க நேரிடும்' என்றனர்.