உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பவானி ஆற்றில் வெள்ளம்; அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படுமா?

பவானி ஆற்றில் வெள்ளம்; அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படுமா?

அன்னூர் : பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 1044 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கின. 1,862 கோடி ரூபாயிலான இந்தத் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஐந்து நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில், அன்னூரில் ஒரு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான குழாய்கள், கிளை குழாய்கள் அனைத்தும் பதிக்கப்பட்டு விட்டன. கடந்த 2023 பிப்ரவரியில் சோதனை ஓட்டம் துவங்கியது. ஒன்றரை ஆண்டாக குளம் குட்டைகளுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துமாறு அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள், விவசாயிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடமும், அமைச்சரிடமும் தமிழக அரசிடமும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கூறுகையில், மழை இல்லை. பவானி ஆற்றில் நீர்வரத்து மிக குறைவாக உள்ளது. ஆற்றில் நீர் அதிகமாக வரும் போது திட்டம் செயல்படுத்தப்படும்,' என்று கூறி வந்தனர்.இது குறித்து அத்திக்கடவு ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த ஓராண்டாக மழை இல்லை. ஆற்றில் தண்ணீர் இல்லை என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் காரணம் கூறி வந்தனர். தற்போது கேரள மாநிலத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. பில்லூர் அணை நிரம்பியுள்ளது. பவானிசாகர் அணையும் 76 அடி அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த நீரை காளிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி, ஆறு நீரேற்று நிலையங்கள் வழியாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 1044 குளம் குட்டைகளை நிரப்ப வேண்டும். இந்த திட்டத்திற்காக 60 ஆண்டுகளாக கடையடைப்பு, காலவரையற்ற உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எனினும் பணிகள் முடிந்து ஒன்றரை ஆண்டு ஆகியும் செயல்படுத்தப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. உடனடியாக இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மூன்று மாவட்டங்களில் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாறும் கால்நடை வளர்ப்பு அதிகரிக்கும். வேலை தேடி விவசாய தொழிலாளர்கள் வெளியூருக்கு செல்லாமல் உள்ளூரிலேயே வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அத்திக்கடவு ஆர்வலர்கள் தெரிவித்தனர். இது குறித்து அத்திக்கடவு திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பவானி சாகர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டினால் தான் உபரி நீர் திறந்து விடப்படும். அப்போது தான் அத்திக்கடவு திட்டத்துக்கு தேவையான 1.5 டி.எம்.சி., தண்ணீர் எடுக்க முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்