| ADDED : ஜூலை 15, 2024 02:47 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே கவியருவியில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப்பயணியரை வெளியேற்றி, வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.பொள்ளாச்சி அருகே ஆழியாறு கவியருவி, சுற்றுலாத்தலமாக உள்ளது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து சுற்றுலாப்பயணியர் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.ஆழியாறு அணையில் வறட்சி காரணமாக சுற்றுலாப்பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர் மழையால், அருவிக்கு நீர் வரத்து அதிகரித்ததால், கடந்த வாரம் அவர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.இந்நிலையில் நேற்று சுற்றுலாப்பயணியர், அருவியில் குளித்துக்கொண்டு இருந்த போது, திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதை கண்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவர்களை வெளியேற்றினர். பின்னர், தற்காலிக தடை விதித்தனர். இதனால், சுற்றுலாப்பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.