| ADDED : ஏப் 02, 2024 11:44 PM
கோவை;துாய்மை பாரதம் திட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில், ரூ.20 லட்சம் செலவில், குப்பை தொட்டிகள் நிறுவப்படவுள்ளன. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 148 பள்ளிகள் உள்ளன. மாணவர்கள் வாயிலாக பெற்றோரிடம் துாய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதன் ஒருபகுதியாக, மாநகராட்சி பள்ளிகளில் துாய்மையை பேணிக்காக்கும் பொருட்டு, குப்பை தொட்டிகள் நிறுவப்படவுள்ளன.மாநகராட்சி கல்வி பிரிவினர் கூறுகையில், 'மாநகராட்சி பள்ளி வளாகங்களில், 'துாய்மை பாரதம்' திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என, இரண்டாம் தரம் பிரித்து சேகரிக்கும் பொருட்டு குப்பை தொட்டிகள் வைக்கப்படவுள்ளன. சுற்றுப்புறத்தில் சுத்தத்தை பேணிக்காக்கும் வகையில், 148 பள்ளிகளிலும் இக்குப்பை தொட்டிகள் வைக்கப்படவுள்ளன. இதன் வாயிலாக துாய்மையின் முக்கியத்துவத்தை, பள்ளிகளிலேயே மாணவ, மாணவியர் கற்றுக்கொள்வர். இதற்கென, இந்தியாண்டில் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது' என்றனர்.