தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் அடுத்த கெம்பனூர், தெற்கு வீதியை சேர்ந்தவர் சக்திவேல்,46; விவசாயி. இவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து, கடந்த, 4 நாட்களுக்கு முன், கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பிய சக்திவேல், வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே நுழைந்தபோது, பின் கதவை உடைத்து நான்கு பேர் உள்ளே புகுந்து, வெள்ளி பொருட்களை திருடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சக்திவேலை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். சக்திவேல் கூச்சலிட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் திருடர்களை துரத்தி சென்றனர். வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்ற நால்வரையும் பிடித்த பொதுமக்கள், திருடர்களை சரியான முறையில் 'கவனித்து' போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார், திருடர்களை மீட்டு, தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து, நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நால்வரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த சமீம் புர்கட்,24, திலுவர் லஷ்கர்,26, பர்வேஜ்,23, ரிங்கு ஷாக்,25 ஆகியோர் என்பதும், தென்னமநல்லூரில் உள்ள பாக்கு ஷெட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தவர்கள் என்பதும் தெரிந்தது. தொண்டாமுத்தூர் போலீசார், நால்வர் மீதும் வழக்குபதிவு செய்தனர். திருடிய வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.