கோவை;''தமிழக மக்களுக்கு தேவையானவற்றை, மத்திய அரசிடம் இருந்து கேட்டு வாங்கித்தரும் 'ஹாட் லைன்' ஆக இருப்பேன்,'' என்று, பா.ஜ.,தலைவர் அண்ணாமலை கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மக்களுக்கு தெரியும், பா.ஜ., என்ன செய்திருக்கிறது, மோடி என்ன செய்துள்ளார் என்பது. அண்ணாமலை வந்துதான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு நாள் இங்கிருந்த எம்.பி., வளர்ச்சி வேண்டாம் என்ற பிடிவாதத்தில் இருந்தவர். இன்னொரு பக்கம், பாலம் கட்ட கமிஷன் வாங்கிய கட்சி. ஊழலுக்காகவே ஆட்சியில் இருந்த ஒரு கட்சி, இன்றைக்கு வளர்ச்சியை பற்றி பேசுகிறது. கொள்ளை அடிப்பதற்காக, கமிஷன் பெறுவதற்காக வளர்ச்சி என்ற வீக்கத்தை காட்டிக் கொண்டிருந்தனர்.என்னுடைய சண்டை, வேட்பாளர்களுடன் அல்ல; எனது நோக்கம், அடுத்த 700 நாட்களில் உண்மையான வளர்ச்சியால், கோவையை மாற்றிக் காட்டுவதே. மத்திய அரசிடமிருந்து வேண்டியதை பெற்றுத்தர ஒரே ஒரு பட்டன், ஹாட்லைன் அண்ணாமலை. உங்களுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக இருந்து, உண்மையான வளர்ச்சியை கொடுக்க போட்டியிடுகிறேன். இரண்டு கட்சிகளுடனும், சண்டை போட தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பணபலத்தை தீர்மானிக்கும் அரசியலுக்கு இடையே, சாதாரண மனிதர்களும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கியுள்ளேன்.ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், ஜெயித்துக் காட்ட முடியும் என்றுதான் சொல்லி இருக்கிறேன். மக்களின் மீதுள்ள நம்பிக்கையால் சொல்லியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி, டீ குடிக்க வேண்டுமானாலும், யாரிடமாவது பணம் வாங்கித்தான் டீ குடிக்க வேண்டும். நாங்கள் கை காசு போட்டுதான் டீ குடிப்போம். இவர்கள் யாரும் எம்.ஜி.ஆர்.,கிடையாது. பணத்தில் கொள்ளையடித்து, இரு குரூப்பை உருவாக்கி அரசியல் செய்கின்றனர். ஐந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பணம் சம்பாதித்து விட்டார்கள். அப்படி வந்த பணத்தை வைத்துக் கொண்டு பேசுகின்றனர். ஆட்சிக்கு வந்தால் இன்னும் சம்பாதிப்பார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 30 சதவீதம் கமிஷன் அடித்துள்ளார்கள். இவர்கள் என்ன மக்கள் தலைவர்கள்? என்ன சமுதாயத் தலைவர்கள்? மரங்களின்றி ஊர் சூடானது தான் மிச்சம். கோவையில் நல்ல பார்க் இல்லை; ரோடு இல்லை. இவர்களது வளர்ச்சி, கோவையின் வளர்ச்சியா? ஜனநாயகத்தை பற்றி பேச ஒருவருக்கு தகுதி, உரிமை இல்லை என்றால், அது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.
'உதயநிதிக்கு செங்கல் துாக்கி காட்டும் அறிவுதான் இருக்கு'
''உதயநிதி ஸ்டாலினுக்கு, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று 'பாருங்க... பாருங்க' என்று சொல்கிற அளவுக்குத்தான் அறிவு இருக்கும். அரசியலில் பக்குவப்படாதவர்கள். வெறும் தாத்தா, அப்பா இனிஷியலை வைத்துக் கொண்டு வந்தால், செங்கல்லை துாக்கி வந்து காட்டும் அளவுக்குத்தான் அறிவு இருக்கும்,'' என்று உதயநிதியை சாடினார் அண்ணாமலை.