| ADDED : ஜூலை 11, 2024 11:23 PM
கோவை அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில், எல்லோரும் வியந்து பார்த்த ஒரு விஷயம் 'மெகா வாட்'. இது தென்னாப்ரிக்க ஆட்டினம். பலர் இதை புகைப்படம் எடுத்தும், 'செல்பி' எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர்.கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த கால்நடைகளுக்கான தனி பிரிவில், தமிழகத்தின் 'காங்கயம்', குஜராத்தின் 'கிர்', பஞ்சாப்பின் 'சாஹிவால்' ரஜஸ்தானின் 'ரதி' ஆகிய நாட்டு மாடு இனங்கள், காளைகள், பசு, கன்று என காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.ஆடுகளுக்கான அரங்கில், மிக வேகமாக வளரக்கூடிய போயர் இன ஆடு, பலரை வியப்பில் ஆழ்த்தியது. 'மெகா வாட்' என பெயரிடப்பட்டுள்ள போயர் இன கிடாயின் மதிப்பு ரூ.6 லட்சம்.இதை காட்சிப்படுத்தியிருந்த விழுப்புரத்தை சேர்ந்த வெங்கடேஷ் கூறியதாவது:தென்னாப்ரிக்காவை சேர்ந்த போயர் இன ஆடுகள், ஒரு வருடத்தில் 70 கிலோ எடையிருக்கும். நமது நாட்டு ஆடுகள், ஒரு வருடத்தில் 10 முதல் 15 கிலோ வரை எடையிருக்கும். தொழில் ரீதியான ஆடு வளர்ப்பில் 25 நாட்டு பெட்டை ஆடுகளுக்கு ஒரு போயர் கிடா என கணக்கில் வளர்க்கும்போது, இரண்டு மடங்கு உடல் எடை கூடுவதால், நல்ல லாபம் பெறலாம்.நமது நாட்டு ஆடுகளை விட, இரண்டு மடங்கு உணவு உட்கொள்ளும். இதன் இறைச்சி சுவையாக இருப்பதால், உலகம் முழுக்க விரும்பி வளர்க்கப்படுகிறது. இதன் குட்டிகள், எங்கள் பண்ணைகளில் விற்பனைக்கு உள்ளன. இந்த ஆடு வளர்ப்புக்கு, மத்திய அரசு சார்பில், 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.