பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகரில், கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார். டெங்கு அபாயம்
பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி நகரில், பல இடங்களில் ரோடுகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. நிறைய இடங்களில் ரோடுகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, ஐந்து முறை சப் - கலெக்டர் அலுவலகத்திலும், பலமுறை நகராட்சி அலுவலகத்திலும், மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.தமிழகத்தில் அதிக சொத்து வரி வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம், ரோடுகள் பராமரிப்பில் அக்கறை செலுத்தாதது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ரோடுகளை தோண்டி போடாமல், பழைய ரோட்டின் மீதே புதிய ரோடுகள் போடப்படுகின்றன. இதனால், ரோடு மட்டத்தின் கீழ், வீடுகள், கடைகள் செல்கின்றன. மழைக்காலங்களில் மழைநீர் புகுந்து விடுகிறது.பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் சேதமடைந்து வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி நகரில், பொதுவாகவே கொசு தொல்லை அதிகம் உள்ளது. தற்போது, மழை பெய்து வருவதால், கொசுக்களால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் அதிகம் பரவும் வாய்ப்புள்ளது.நகராட்சி நிர்வாகத்தால் கொசுக்களை ஒழிக்க முறையான நடவடிக்கை இல்லை. எனவே, கொசுக்களை கட்டுப்படுத்தி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க, மருந்து தெளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை தொட்டி தேவை
தாத்துார் ஆதிதிராவிட பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, தாத்துார் பத்ரகாளியம்மன் கோவில் காலனியில், 15 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிடர் நலத்துறையில், 65 குடும்பங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, இங்கு தங்கி விவசாய கூலி செய்து ஜீவனாம்சம் செய்து வருகிறோம்.இப்பகுதியில், குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். இங்கு மேல்நிலை குடிநீர் தொட்டி இல்லாததால், டி.எஸ்.ஏ., நகரில் உள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் தாத்துார் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக, 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடமும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே, குடிநீர் வினியோகம் முறையாக செய்ய இப்பகுதிக்கென மேல்நிலைத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகத்தடை தேவை
அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஒன்றிய தலைவர் நாகமாணிக்கம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், வேகத்தடை இல்லாததால் அதிகம் விபத்துகள் நடக்கிறது. இதுகுறித்து மனுக்கள் கொடுத்த பின், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, வேகத்தடையும் போடப்பட்டது.சில மாதங்களுக்கு முன், சாலை விரிவாக்க பணி காரணமாக, காளியம்மன் கோவில், தெற்கு ஊராட்சி ஒன்றிய பள்ளி, சூளேஸ்வரன்பட்டி நந்தினி மஹால், தங்கம் தியேட்டர் ஆகிய இடங்களில் போடப்பட்டு இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது.இதனால், அங்கு சில நாட்களாக விபத்துகள் ஏற்படுகிறது. தனியார் மஹால் அருகில் பள்ளி இருப்பதால், பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே, ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளிட்ட ஐந்து இடங்களில், வேகத்தடை அமைக்க வேண்டும்.இவ்வாறு, வலியுறுத்தப்பட்டுள்ளது. இலவச பட்டா
ஜமீன் முத்துார் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'ஜமீன் முத்துார் ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் வசிக்கின்றனர். கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, காணியலாம்பாளையம் ஊராட்சியில், நத்தம் காலியிடம் உள்ளதால், பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என, மனு கொடுக்கப்பட்டது.