ஒவ்வொவரின் வாழ்க்கையும், ஏதோ ஒரு புத்தகத்தில் ஒளிந்திருக்கும். அதை தேடி கண்டுபிடிப்பது சிரமம். ஆனால், ஒவ்வொரு புத்தகமும் ஒரு பாதை காண்பிக்கும்.இந்த பாதைக்கு வித்திட்டது, கோவை சுந்தராபுரம் ஈக்விடாஸ் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்கள் புரிந்து கொள்ள, பள்ளியில் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில், ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 300 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, நாளிதழ் மற்றும் பள்ளி நுாலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.ஒரு மணி நேரம் வாசிப்பில் ஈடுபட்ட குழந்தைகள், தாங்கள் அறிந்து கொண்டதை மற்ற மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். நாளிதழில் வந்த குறுக்கெழுத்து போட்டியில், திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, பரிசும் வழங்கப்பட்டது.பள்ளி முதல்வர் சாந்தி, ''பள்ளி குழந்தைகள், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருவது மிக முக்கியம். மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற மாணவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் அறிந்து கொண்டதை, ஆசிரியர்களிடமும், மற்ற மாணவர்களிடம் வெளிப்படுத்தினர்,''.''குட்டி கதைகள் கொண்ட புத்தகம், பொது அறிவு சார்ந்த புத்தகங்களை, பள்ளி நுாலகத்தில் வாங்கி வைக்கலாமே என்று, எங்களுக்கு அறிவுரை வழங்கியது, வியப்பாக இருந்தது. அதுபோன்ற புத்தகங்களை வாங்கி வைக்க உள்ளோம்,'' என்றார்.வாசிப்பு... நம் சுவாசிப்பு ஆகட்டும்!