| ADDED : ஜூன் 27, 2024 10:43 PM
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், மாவட்ட தொழில் மையம் வாயிலாக சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் 927 நபர்களுக்கு, 49.70 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை: கோவை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்தாண்டு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம், 55 நபர்களுக்கு ரூ.6.79 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 213 நபர்களுக்கு ரூ.27.92 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 284 நபர்களுக்கு ரூ.3.20 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 375 நபர்களுக்கு ரூ.11.79 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில், கோவை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் மொத்தம், 927 நபர்களுக்கு, ரூ.49.70 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன், www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.