உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ரோட்டில் மண் குவியல்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்!

கோவை ரோட்டில் மண் குவியல்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்!

ரோட்டில் கழிவுநீர்

ஆழியார் நகர், பூங்காவிற்கு எதிரில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -கனகன், ஆழியாறு.

பகலில் ஒளிரும் மின்விளக்கு

நெகமம் பகுதியில், பல இடங்களில் பகல் நேரத்தில் மின் விளக்குகள் ஒளிர்கின்றன. இதனால், மின்சாரம் வீணாகிறது. மின் தட்டுப்பாடு நிலவும் நிலையில், மின்சாரம் வீணாவதை தடுக்க, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -கிரிபிரசாத், நெகமம்.

தெருநாய்கள் தொல்லை

கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில் இரவு நேரத்தில் ரோட்டில் அதிகளவில் தெருநாய்கள் உலாவுகின்றன. இதனால், வாகன ஓட்டுநர்கள் பைக்கில் செல்லும் போது, நாய்கள் பின் தொடர்ந்து விரட்டி அச்சுறுத்துகின்றன. மேலும், பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் இடையூறு செய்கின்றன. இங்குள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -கார்த்தி, கிணத்துக்கடவு.

வீணாகும் குடிநீர்

கிணத்துக்கடவில், பல இடங்களில் குடிநீர் வீணாகி, ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சீரமைத்து, மக்களுக்கு முறையாக வினியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -மனோஜ், கிணத்துக்கடவு.

மின் கம்பம் சேதம்

பொள்ளாச்சி அடுத்துள்ள, அம்பராம்பாளையத்தில் இருந்து, குளத்தூர் செல்லும் வழித்தடத்தில் ஓரக்கலியூர் பிரிவு அருகில் உள்ள மின் கம்பம் ஒன்று, வாகனம் மோதியதில் சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.-- -ராஜேந்திரன், குளத்தூர்.

ரோடெல்லாம் மண் கழிவு

பொள்ளாச்சி - கோவை ரோட்டில், மழை காலத்தில் அடித்து வரப்பட்ட மண், கோவில்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், 'சென்டர் மீடியன்' அருகில் குவிந்து கிடக்கிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டில் குவிந்துள்ள மண்ணை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும்.- ஹரிஹரசுதன், பொள்ளாச்சி.

குப்பைக்கு தீ வைப்பு

உடுமலை, சர்தார் வீதி எக்ஸ்டன்சன் பகுதியில் குப்பைக்கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதியே புகைமூட்டமாக மாறி, மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். குப்பையை எரிப்பவர்கள் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜெயந்தி, உடுமலை.

இருக்கை வசதியில்லை

உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியர் அமர போதிய இருக்கைகள் இல்லை. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே, நகராட்சியினர் போதிய இருக்கைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.

திறந்தவெளி கழிப்பிடம்

உடுமலை, ராஜேந்திரா ரோடு அரசு பள்ளியின் சுற்றுசுவரை திறந்தவெளி கழிப்பிடமாகவே மாற்றியுள்ளனர். அப்பள்ளி மாணவர்கள் மிகுதியான துர்நாற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தொடர்ந்து அவ்விடம் கழிப்பிடமாக மாற்றப்பட்டு வருவதால், பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கிறது.- ராகவன், உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் விதிமுறை மீறி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால், மாலை நேரங்களில், தளிரோடு சிக்னல் முதல் குட்டைதிடல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் ரோட்டை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.- விஜயன், உடுமலை.

கால்வாயை துார்வாரணும்!

உடுமலை, ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டில் இருந்து, ராஜலட்சுமி நகர் செல்லும் மழைநீர் கால்வாய் துார்வாரப்படாமல் குப்பை தேங்கியுள்ளது. சில நேரங்களில், அதில் தேங்கும் குப்பைக்கு தீ வைத்து எரிக்கின்றனர். எனவே, கால்வாயை துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருப்பசாமி, உடுமலை.

கழிவுநீர் தேக்கம்

உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சாக்கடை குழி மூடப்படாமல் உள்ளது. இதில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ரேஷன் பொருட்கள் பெற வரும் மக்கள் அவதிப்படுகின்றனர்.-ராமகிருஷ்ணன், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை