| ADDED : ஜூலை 25, 2024 12:21 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், ரோட்டில் சுற்றித்திரிந்த ஆடுகளை பிடித்த நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி நகரப்பகுதியில், ஆடு, மாடுகளை வளர்ப்போர், மேய்ச்சலுக்காக அப்படியே அவிழ்த்து விடுகின்றனர். ரோட்டில் சுற்றும் கால்நடைகள் போதிய உணவு கிடைக்குமா என தேடலை துவங்கி, ரோட்டோரம் உள்ள புற்கள், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் உட்கொள்கின்றன.அதன்பின், ஹாயாக ரோட்டிலேயே படுத்து உறங்குகின்றன. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாடு திண்டாட்டமாகிறது. விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை சுதந்திரமாக சுற்ற விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்லடம் ரோட்டில் சுற்றித்திரிந்த ஆடுகளை பிடித்தனர். அங்கு இருந்த, ஏழு ஆடுகளை பிடித்து நகராட்சி வாகனத்தில் ஏற்றினர். அவற்றின் உரிமையாளர்கள் ஒரு ஆடுக்கு, தலா, 500 ரூபாய் அபராதம் செலுத்திய பின் ஆடுகளை விடுவித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ரோடுகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை விடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல்லடம் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆடுகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்ந்தால், ஆடுகள் பறிமுதல் செய்யப்படும்,' என்றனர்.