| ADDED : ஜூலை 14, 2024 05:38 PM
வால்பாறை:ரோடு சீரமைக்க கோரி, வால்பாறை, சோலையாறு டேம் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு டேம். இங்கிருந்து ேஷக்கல்முடி செல்லும் ரோட்டில் மின்வாரியத்திற்கு சொந்தமான ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோடு, கடந்த, 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால், இந்த ரோட்டில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'சோலையாறு டேம் பஜாரை ஒட்டியுள்ள, ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க கோரி வார்டு கவுன்சிலர் முதல், அமைச்சர் வரை அனைவரிடமும் மனு கொடுத்துள்ளோம். கரடு, முரடான இந்த ரோட்டை யாரும் சீரமைக்கவில்லை.மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதில், நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றனர்,' என்றனர்.வால்பாறை நகராட்சி, 8வது வார்டு கவுன்சிலர் இந்துமதியிடம் கேட்ட போது, ''சோலையாறுடேம் பஜார் பகுதியில் உள்ள ரோட்டை சீரமைக்க, மாவட்ட கலெக்டர் வாயிலாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரியத்துக்கு சொந்தமான ரோட்டை முறைப்படி அவர்கள் நகராட்சி வசம் ஒப்படைக்கவில்லை. ரோட்டை ஒப்படைத்தவுடன், பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ரோடு சீரமைக்கப்படும்,'' என்றார்.