| ADDED : ஜூன் 02, 2024 11:40 PM
மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, ஆற்றில் குளிப்பவர்களை தடுக்கும் வகையில், மாநில பேரிடர் மீட்பு குழுவும், லைப் கார்டு போலீசாரும் இணைந்து, கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், பொதுமக்கள், இளைஞர்கள் அதிக அளவில் குளித்து வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களை தடுக்கும் வகையில், கோவை ரூரல் எஸ். பி., பத்ரி நாராயணன் லைப் காட் போலீஸ் குழுவை அமைத்து, பவானி ஆற்றுப்பகுதியை கண்காணிக்கும் படி கூறினார். இதை அடுத்து ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் 12 போலீசார் கொண்ட குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். தற்போது பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் பவானி ஆற்றில் நெல்லித்துறை, குண்டுகள்துறை, சாமண்ணா நீரேற்று நிலையம், வெள்ளிப்பாளையம், வச்சனம்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆற்றில் குளிப்பதை தடுக்கும் நடவடிக்கையில், ஒவ்வொரு இடங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினரும், லைப் கார்டு போலீசாரும் ஆற்றில் குளிப்பவர்ளை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.