| ADDED : ஜூலை 08, 2024 11:01 PM
கோவை:சோமனூர் ரகத்திற்கு, 60 சதவீதமும், இதர ரகங்களுக்கு, 50 சதவீத கூலி உயர்வும் வழங்க வேண்டும் என்று, கோவை- திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்த, கோவை- திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அளித்த மனு:கடந்த ஜனவரி மாதம் கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் முன்னிலையில் நடந்த பேச்சில் சோமனூர் ரகத்திற்கு, 60 சதவீத கூலி உயர்வும், இதர ரகங்களுக்கு, 50 சதவீத கூலி உயர்வும் பெற்றுத்தரக் கோரி, கோவை- திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.ஆனால் இந்த மனு மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, உடனடியாக ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, புதிய கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.