மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றுத் தண்ணீர் வழங்கக் கோரி, சிறுமுகை அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சிறுமுகை அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பெள்ளேபாளையம் ஊராட்சி உள்ளது. ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் கடந்த, 20 நாட்களாக ஆற்று தண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவில்லை. போர்வெல் தண்ணீரை மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பவானி ஆற்றில் வச்சினம்பாளையம் அருகே இரண்டு இடங்களில் எடுக்கப்படும் தண்ணீர், அன்னூர், அவிநாசி, சூலூர் மோப்பிரிபாளையம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆற்றின் அருகே உள்ள ஊராட்சி மக்கள், ஆற்று தண்ணீர் குடிக்க முடியவில்லை. ஆனால் வெளியூர் மக்கள் ஆற்றுத் தண்ணீரை குடிக்கின்றனர். எனவே எங்களுக்கும் பவானி ஆற்று தண்ணீர் வழங்க வேண்டும் என, பெள்ளேபாளையம் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் காலி குடங்களுடன், சிறுமுகை நால்ரோட்டில், நேற்று காலை,10 மணிக்கு சாலை மறியல் செய்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து, இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளேபாளையம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள கணபதி நகரிலும், வெள்ளிக்குப்பம்பாளையம் பிரிவு, அன்னூர் சாலையிலும் மறியல் செய்தனர். பொதுமக்களிடம் குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சித்ரா, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி, பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் சூலூர் குடிநீர் திட்டத்திலிருந்து, மூன்று குடிநீர் குழாய் புதிதாக அமைத்து, அதன் வாயிலாக குடிநீர் வழங்கப்படும் என, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார். இதை அடுத்து மதியம் ஒரு மணிக்கு, பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கு மேல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியலில் மயங்கிய மூதாட்டி
சிறுமுகை நால் ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வயதானவர்கள் வெயிலில் நின்று மறியல் செய்து கொண்டிருந்தனர். 12 மணி அளவில் சிறுமுகை எஸ்.ஆர்.எஸ்., நகரை சேர்ந்த விஜயாமணி, 72 என்ற வயதான மூதாட்டி திடீரென மயக்கம் அடைந்தார். மறியலில் ஈடுபட்டவர்கள் மூதாட்டியை கைத்தாங்கலாக தூக்கிச் சென்று, நிழலில் உட்கார வைத்து, தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். இதனால் சாலை மறியலில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.