| ADDED : ஜூலை 29, 2024 02:29 AM
கோவை;மனநல மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பலவற்றை, மாணவர்கள் மாநாட்டில் கற்று கொண்டனர். இந்திய மனநல மருத்துவ சங்க, தமிழக கிளையின், 39வது மாநில மாநாடு கோவை பீளமேட்டில் உள்ள ஜென்னி கிளப்பில், கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது.நேற்று நடந்த மாநாட்டில் பயிலரங்கம், மனநல மருத்துவம் தொடர்பான, 200 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தல், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு போட்டி கட்டுரை ஆகியவை நடத்தப்பட்டது. ஆளுமைக் கோளாறு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.அப்போது நோயாளிகளின் ஆளுமை கோளாறை சமாளிப்பது மற்றும் தீர்ப்பது எப்படி, தற்கொலை எண்ணத்தை தவிர்ப்பது எப்படி, தன்னை தானே காயப்படுத்தி கொள்வதை சமாளிப்பது போன்ற பயிற்சி வழங்கப்பட்டது.இதுகுறித்து, டாக்டர் சீனிவாசன் கூறுகையில், “மாநாட்டில் கலந்து கொண்ட பட்டப்படிப்பு மாணவர்கள், மனநல மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பலவற்றை தெரிந்து கொண்டனர். அதன் வாயிலாக தங்களது நோயாளியை அணுகும் விதத்தில் முன்னேற்றம் ஏற்படும்,” என்றார். மாநாட்டில், தமிழ்நாடு மனநல மருத்துவ கழகத்தின் துணை தலைவர் சாப்ரின் ராஸ், மூத்த மனநல டாக்டர் மோனி, டாக்டர் வெங்கடேஷ்குமார் மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்தும், 600க்கும் மேற்பட்ட, மனநல டாக்டர்கள் கலந்து கொண்டனர்.