பொள்ளாச்சி;அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நீண்ட நாள் விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு மாற்றாக, தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டும் வருகிறது.ஆசிரியர்கள் வாயிலாக அவ்வப்போது, மாதாந்திர தேர்வு மற்றும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மகப்பேறு, உடல் பாதிப்பு என, நீண்ட விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு மாற்றாக தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டும் வருகின்றனர்.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பாட ஆசிரியர்கள் எவரேனும் நீண்ட நாள் விடுப்பில் செல்லும் போது, மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும்.அதற்கேற்ப தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். நிரந்தர ஆசிரியர்கள் வரும் வரை அவர்கள் பள்ளிகளில் பணிபுரியலாம். அதன்பின், அவர்களுக்கு பள்ளியில் பணி புரிந்தமைக்கான கடிதம் அளிக்கப்பட்டு, விடுவிக்கப்படுவர்.குறிப்பாக, இடைநிலை ஆசிரியருக்கு, 12 ஆயிரம் ரூபாய், பட்டதாரி ஆசிரியருக்கு, 15 ஆயிரம் ரூபாய், முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு, 18 ஆயிரம் ரூபாய் வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.