| ADDED : ஆக 07, 2024 04:07 AM
கோவை : கோவை பூண்டியில் உள்ள, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மண்டப புனரமைப்பு பணியில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, 7 பேர் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 31ம் தேதி, தடையை மீறி, வெள்ளியங்கிரி மலை ஏறினர். 3வது மலையிலேயே அதிக பனி மூட்டம் காணப்பட்டதால், மேற்கொண்டு மலை ஏறாமல் திரும்பியுள்ளனர். ஆனால், இவர்களில் முனுசாமி, 27 என்பவர் மட்டும் பிறரிடம் கூறாமல், மலைமேல் சென்றுள்ளார்.பாதியில் திரும்பியவர்கள் இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.வனத்துறையினர், ஆலாந்துறை போலீசாரின் உதவியுடன் இரு குழுக்களாக பிரிந்து, முனுசாமியை ரகசியமாக தேடி வருகின்றனர். கடந்த 1ம் தேதி முதல், நேற்று மாலை வரை தேடியும் முனுசாமியை கண்டுபிடிக்க முடியாமல், திணறி வருகின்றனர்.மேலும், 2014ல் திண்டுக்கல்லை சேர்ந்த திரைப்பட இயக்குனர் வினோ மிர்தாத் என்பவர், லொக்கேஷன் பார்க்க மலைமேல் சென்று காணாமல் போனார். 10 ஆண்டுகளாகியும் இவர் குறித்து இன்று வரை எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.