வால்பாறை : வால்பாறையில், தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர், என, நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு, கமிஷனர் விநாயகம், துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.கூட்டத்தில் பேசிய தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:வால்பாறை நகராட்சியில் எந்த வளர்ச்சிப்பணியும் முறையாக நடப்பதில்லை. குறிப்பாக, வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில் தெருவிளக்கு கூட முறையாக அமைக்கப்படவில்லை.வார்டுகளில் தரமற்ற வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. நகராட்சியில் கூடுதலாக, ஆயிரம் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். மக்களிடம் வரி மட்டும் வசூலித்து விட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இழுத்தடிப்பதை கண்டிக்கிறோம்.தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, பேசினர். மறியல் செய்வேன்!
வால்பாறை நகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன் பேசும் போது, ''நகராட்சியில் டெண்டர் விடுவதோடு சரி, பணி முறையாக நடக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.கெஜமுடி கீழ் பிரட்டு செல்லும் ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும். யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.முடீஸ் பஜார் பகுதியில் பயணியர் நிழற்க்கூரை, கழிப்பட வசதி உடனடியாக செய்துதர வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சியை கண்டித்து மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவேன்,'' என்றார். முறைகேடு இல்லை
கமிஷனர் பேசும்போது, ''வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தெருவிளக்கு அமைப்பது குறித்து, உயர்அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின் நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் எவ்வித முறைகேடும் நடைபெறுவதில்லை,'' என்றார்.