உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்று அ.தி.மு.க., இன்று தி.மு.க.,: கோவை மேயருக்கு ராஜினாமா ராசி!

அன்று அ.தி.மு.க., இன்று தி.மு.க.,: கோவை மேயருக்கு ராஜினாமா ராசி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., இரு ஆட்சிகளிலும், கோவை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், முழுமையாக பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல், பாதியில் ராஜினாமா செய்வது இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது.கோவை நகராட்சி, 1981ல் மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டாலும், 1996ல் தான், முதல் முறையாக, மாநகராட்சிக்கான தேர்தல் நடந்தது. அப்போது தி.மு.க., கூட்டணியில் த.மா.கா.,வை சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன், கோவை மேயராக நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்ததாக, 2001ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் மலரவன் மேயரானார்.கடந்த 2006ல், தி.மு.க, ஆட்சிக்கு வந்தபின், மேயரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்பட்டு, கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் முறை கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க., கூட்டணியில், காங்., கவுன்சிலராக இருந்த காலனி வெங்கடாசலம், கோவை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதற்கு பின், 2011ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்ததும், மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை, மறுபடியும் நடைமுறைக்கு வந்தது. அ.தி.மு.க., சார்பில் செ.ம.வேலுச்சாமி மேயராக வெற்றி பெற்றார். இரண்டரை ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்த அவர், 2014 மே 27ல், தலைமை உத்தரவின்படி, தன் பதவியை ராஜினாமா செய்தார்.துணை மேயராக இருந்த லீலா உன்னி, மூன்று மாதங்களாக மேயர் பொறுப்பை வகித்தார். அந்த ஆண்டில் அக்டோபரில் நடந்த மேயர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்ட ராஜ்குமார் மேயராக வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகள் அவர் அந்த பதவியில் நீடித்தார். 2016ல் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்ததும், உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தப்பணிகள் நடந்தன.ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அவர் மறைந்த பின், நான்கரை ஆண்டுகளாக, உள்ளாட்சித் தேர்தலே தமிழகத்தில் நடத்தப்படவில்லை. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், 2022ல் தான், நகர்ப்புற தேர்தல் நடந்தது. மறுபடியும் கவுன்சிலர்களால் மேயர் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. கோவை மாநகராட்சியில் தி.மு.க., கூட்டணி, 97 வார்டுகளை அள்ளியது. நிவேதா சேனாதிபதி, மீனா லோகு, இளஞ்செல்வி உள்ளிட்ட பலருடைய பெயர்களும் மேயர் பதவிக்கு அடிபட்டன. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, கல்பனா ஆனந்தகுமார் என்ற புதுமுகத்தை, மேயர் வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற வைத்தார் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின்.தி.மு.க.,வில் அடிமட்டத் தொண்டர்கள் முன்னேற வாய்ப்பேயில்லை என்ற கருத்தை பொய்யாக்கும் வகையில், புதியவருக்கு வாய்ப்பு வழங்கினால், கட்சியின் கீழ்மட்ட தொண்டர்கள், விசுவாசத்துடன் உழைப்பர் என்ற நம்பிக்கையில், இப்படி செய்வதாக கூறப்பட்டது. ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைக்கும் வகையில், மேயர் கல்பனா, மக்கள் பணி, கட்சிப்பணி எதையுமே செய்யவில்லை.செ.ம.வேலுச்சாமி, கோவை மேயராவதற்கு முன், எம்.எல்.ஏ., அமைச்சர், மாவட்டச் செயலர் என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த ஆளுமையாக இருந்தார். அவர் மேயரான பின், அவருடைய நடவடிக்கைகள் பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் தான், அவர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், நீக்க முடியாமல் ராஜினாமா செய்ய வைத்தார் ஜெயலலிதா.கல்பனா, யாருக்குமே தெரியாத மிக எளிமையான குடும்பத்தில் இருந்து, இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டும், கவுன்சிலர்கள், அதிகாரிகள், கட்சிக்காரர்கள் யாருடனுமே இணக்கமாக இல்லை. மாறாக, அவர் மீதும், அவருடைய குடும்பத்தினர் மீதும் கடும் விமர்சனங்கள் பரவின.ஒப்பந்தப்பணிகளில் மூன்று சதவீத கமிஷன் கேட்டது, வாட்ஸாப் குழு அமைத்து டெண்டர் விட்டது, கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்தது போன்ற புகார்கள் குவிந்தன. அத்துடன், கட்சி நிர்வாகியின் தள்ளுவண்டி கடையில் மாமூல் கேட்டது, தேர்தல் பணி செய்யாதது போன்ற குற்றச்சாட்டுகளால் பறிபோயுள்ளது பதவி.வளர்ந்து வரும் தொழில் நகரத்துக்கு, படித்த, திறமையான, நேர்மையான மேயர் கிடைக்காதது கோவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 05, 2024 09:38

கோயம்புத்தூர் வளர்ச்சி கோவை மக்களின் உழைப்பினாலும் கல்வியறிவினாலும் தான் உயர்ததே தவிர இந்த திராவிட கட்சிகளினால் அல்ல. மாறாக இந்த திராவிட கட்சிகள் அந்த வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோவை மக்களை எப்பொழுதும் ஒரு வித கஷ்டத்திலியே வைத்திருக்கின்றன. தற்போது பாலங்கள் கட்டுவதால் போக்குவரத்து கஷ்டம். தாங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நிலத்தின் விலையை பன்மடங்கு உயர்த்தி விட்டனர். பக்கத்து மாநிலமான கேரளத்தோடு தங்கள் கனிம வளங்கள் விற்பனைக்கு கொடுக்கும் முக்கியதுவத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையில் பாதியை கூட தராததால் தான் கோயம்புத்தூர் மாவட்டம் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படமலேயே உள்ளது. சிறுவாணி தண்ணீர் எந்த அளவுக்கு சுவையாக இருந்தது என்பது என்பது தொன்னூறுகளில் இருந்தவர்களுக்கு தெரியும். இப்போது அதன் சுவையில் கால் பாகம் கூட இல்லை. மலை காடுகள் அழிப்பு கனிம வளங்கள் திருட்டு ஆகியவை முக்கிய காரணம். இதற்கு திராவிட கட்சிகள் தான் முழுக்க முழுக்க காரணம்.


panneer selvam
ஜூலை 04, 2024 21:32

Corruption is imbibed with Dravidian Parties in Tamilnadu irrespective their functionaries from ordinary background or rich background . Without Corruption and looting of public money , Dravidian parties can not survive .


புதிய வீடியோ