உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1.20 கோடி குடிநீர் திட்டம் நிறைவேறாததற்கு யார் காரணம்?எதனால் காலதாமதம்; எப்போது முடிவடையும்?

ரூ.1.20 கோடி குடிநீர் திட்டம் நிறைவேறாததற்கு யார் காரணம்?எதனால் காலதாமதம்; எப்போது முடிவடையும்?

மேட்டுப்பாளையம்:இரண்டு ஆண்டுகளாகியும், 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான, குடிநீர் திட்டம் நிறைவேற்றவில்லை. அதனால் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள், குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே, சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. நகராட்சி எல்லை அருகே குமரபுரம், ராஜீவ் நகர், சுதந்திராபுரம் என, 15க்கு மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பு பகுதிகளுக்கு, 10 முதல், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. போதிய குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவதி

இவர்களுக்கு சீரான குடிநீர் வழங்க, ஊராட்சிக்கு என, தனி குடிநீர் திட்டம் அமைக்க, 1.20 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் துவங்கி இரண்டு ஆண்டு ஆகிறது. ஆனால் இன்னும் பணிகள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. ஒவ்வொரு பணிகளும் பாதியில் நிற்கின்றன. இது குறித்து சேரன் நகர் பகுதி மக்கள் கூறுகையில்,'இந்த ஊராட்சி வழியாக பவானி ஆறு ஓடுகிறது. ஆனால் சேரன் நகர் பகுதி மக்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்த ஆற்று தண்ணீரை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும் குடிநீர் திட்டப் பகுதிகளில், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் விநியோகம் செய்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பவானி ஆறு அருகே இருந்தும், போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். எனவே புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க, ஊராட்சி மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

வனத்துறையிடம் அனுமதி

இதுகுறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா கூறியதாவது: கடந்தாண்டு பிப்ரவரி மாதம் குடிநீர் திட்ட பணிகள் துவங்கின. ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டில் ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் பாதி அளவு பணிகள் கூட முடிக்காமல் உள்ளன. பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன.வெள்ளிப்பாளையம் சாலையில் பவானி ஆற்றில் கட்டியுள்ள இன்டெக் வெல்லில் (கிணறு) இருந்து சென்னாமலை மீது கட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு, மலைப்பகுதி வழியாக குடிநீர் குழாய் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக வனத்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் குழாய் பதிக்கப்படும். குடிநீர் திட்டம் விரைவில் செய்து முடிக்க, அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஊராட்சி தலைவர் கூறினார். இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில், வனப்பகுதியில் எந்த வேலை செய்வது என்றாலும், ஆன்லைனில் வேலை குறித்து பதிவு செய்ய வேண்டும். பதிவை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி வழங்குவர். மலை மீதுள்ள வனப்பகுதியில் குழாய் பதிக்கும் இடங்களில் உள்ள மரங்கள், செடிகள் பாதிப்புக்கு உள்ளாவது குறித்து, இழப்பீட்டுத் தொகை கட்டும்படி, காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, வனத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொகை கட்டி முடித்தவுடன் விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது , என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி