பொள்ளாச்சி:'பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், புதிதாக கூடுதல் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என, சுகாதாரத்துறை அமைச்சரிடம்மனு கொடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியனிடம், மருத்துவமனை நிர்வாகம் மனு கொடுத்தது. மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, 6.49 ஏக்கர் பரப்பளவில்,462 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது.கேரளா மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள், கிராம மக்கள் சிகிச்சைக்காகவும், வால்பாறை பழங்குடியின மககள், தேயிலை தோட்ட பணியாளர்கள் மேல் சிகிச்சைக்காகவும் வருகின்றனர்.புதிதாக கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த ஆய்வுக்கூடம் ஆகிய மருத்துவப்பிரிவு கட்டடங்கள், நோயாளிகளின் பயன்பாட்டுக்கு துவங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ், பல்வேறு வசதிகள் கொண்ட கட்டணப்படுக்கைகளுக்கான பணி நடக்கின்றன.மருத்துவமனையில்தினமும், 1,700 புறநோயாளிகள், 400க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். மகப்பேறு பிரிவில் மாதத்துக்கு சராசரியாக, 250 - 300 மகப்பேறும், 80 - 100 வரையிலான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடக்கிறது.'சி.டி., ஸ்கேன்' பிரிவில் மாதத்துக்கு, 700 பேருக்கு பரிசோதனையும், எக்ஸ்-ரே பரிசோதனை 3,500 பேருக்கும், அல்ட்ரா சவுன்ட் சி.டி., ஸ்கேன், 750 பேருக்கும் எடுக்கப்படுகிறது. ஆனால், குறைந்த அளவிலான டாக்டர்கள், செவிலியர்களை கொண்டே மருத்துவமனை செயல்படுகிறது.டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு கூடுதல் பணிப்பளு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.பணிச்சுமையை குறைக்க அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து, மாற்றுப்பணியாக டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, புதியதாக பணியிடங்களை ஒதுக்கீடு செய்து நிரப்பவேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.