- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர் அருண் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கலாநிதி ஆண்டறிக்கை வாசித்தார்.முதல் மதிப்பெண் பெற்ற, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும்; பள்ளிக்கு, 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இலக்கியம், கலை விளையாட்டு சார்ந்த பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் முருகேஸ்வரி, உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.*அங்கலகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமையாசிரியர் ஜோதிமல்லிகா வரவேற்றார். ஆசிரியர் சாந்தி, ஆண்டறிக்கை படித்தார்.மாணவர்களுக்கு கரகாட்டம், நாடகம், மாறுவேடப்போட்டி, பரதநாட்டியம், சிலம்பாட்டம், குழு நடனங்கள் உள்ளிட்ட கலை, இலக்கிய போட்டிகள் நடைபெற்றன.பேச்சு, பாட்டு, ஓட்டம், நொண்டி, இசைநாற்காலி, தவளை ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சகுந்தலா, ஞானசவுந்தரி, சாந்தி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். ஆசிரியர் பூங்கொடி நன்றி கூறினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, துணை தலைவர் நித்யா உள்பட பலர் பங்கேற்றனர். உடுமலை
உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு தலைமையாசிரியர் மரியபுஷ்பம் தலைமை வகித்தார். ஆசிரியர் சிவப்பிரகாஷ் வரவேற்றார். ஆசிரியர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர் தங்கவேல் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். மாணவர்களின் நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், யோகா, நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன.முன்னாள் ஊராட்சித் தலைவர் பரமசிவம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழுவினர், வட்டார கல்வி அலுவலர்கள், மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.* குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில், ஆசிரியர் பத்மகீதா வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் ஜோதிமணி ஆண்டறிக்கை வாசித்தார்.சொற்பொழிவாளர் உமாநந்தினி, தேச தலைவர்கள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவியர் விளக்கிப் பேசினர். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில், பராம்பரிய கலையான தேவராட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் ஆடி அசத்தினர். மாணவ, மாணவியர் இடையே பேச்சு, பாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இன்ஸ்பெக்டர் ரோசலின், சமூகசேவகர் ரங்கசாமிஜெயராமன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அனிதா, துணைத்தலைவர் ஜெயராஜ், ஓவிய ஆசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் முகமதுஅஸ்லாம் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் சக்திவேல்ராஜா நன்றி கூறினார்.