உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் கல்லூரிகளுக்கு பேராசிரியர் அந்தஸ்து : பாரதியார் பல்கலை நிர்வாகம் அனுமதி 

தனியார் கல்லூரிகளுக்கு பேராசிரியர் அந்தஸ்து : பாரதியார் பல்கலை நிர்வாகம் அனுமதி 

கோவை:தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்க சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட, பேராசிரியர் அந்தஸ்து தனியார், சுயநிதி கல்லுாரிகளில் நடைமுறைப்படுத்த பாரதியார் பல்கலை அனுமதியளித்துள்ளது.பல்கலை மானியக்குழு வழிகாட்டுதலின்படி, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் ஆகிய மூன்று பதவியினை நியமிக்க வழிவகை உள்ளது. தனியார், சுயநிதி கல்லுாரிகளில், பணிபுரியும் உதவி பேராசிரியர்களுக்கு, இணை பேராசிரியர் பதவி உயர்வு மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்படாமல் இருந்தது.இச்சங்கம் சார்பில், சுயநிதிக்கல்லுாரிகளில் பேராசிரியர் பதவியை நியமிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், 2019 முதல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, 2019 ஆக., 14ம் தேதி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் கோரிக்கையை நிறைவேற்ற, பல்கலை பதிவாளர் மற்றும் தமிழக தலைமை செயலருக்கும் 2020 ஜன., 3ம் தேதி உத்தரவிட்டது. கோரிக்கை நிறைவேற்றுவதில், தொடர்ந்து தாமதம் நீடித்ததால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற சங்க தரப்பில் மீண்டும் வலியுறுத்தி கடிதம் வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து, கடந்த, 2023, டிச., 1ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையிலும், பல்கலை துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன், பல்கலை மானியக்குழு 2018 வழிகாட்டுதலின் படி, இணை பேராசிரியர்கள் பேராசிரியராக பதவி உயர்வு பெற பாரதியார் பல்கலை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அங்கீகாரம் பெற்ற, சுயநிதி கல்லுாரிகளில் பேராசிரியர் பதவியை நடைமுறைப்படுத்த ஆணை அனுப்பப்பட்டுள்ளது.இணை பேராசிரியர் ஒருவர், ஆறு ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படமுடியும்; பேராசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இனி 8 ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியும். தனியார், சுயநிதி கல்லுாரிகளுக்கு பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி