உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண் விழிக்காத கேமராக்கள்; குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பில்லை!

கண் விழிக்காத கேமராக்கள்; குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பில்லை!

பெயர் பலகை சேதம்

வால்பாறை நகரில் இருந்து, பச்சமலை எஸ்டேட் செல்லும் ரோட்டில் வழிகாட்டி பெயர் பலகை சரிந்த நிலையில் உள்ளது. அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க வேண்டும்.-- -கவிதா, பச்சமலை எஸ்டேட்.

மின் கம்பத்தில் கொடி

கிணத்துக்கடவு, அண்ணா நகர் - கம்பன் வீதி செல்லும் ரோட்டில் உள்ள மின் கம்பத்தின் ஒயர்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால், மின் ஒயர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், சரி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -சந்துரு, கிணத்துக்கடவு.

அபராதம் விதிக்கணும்!

வால்பாறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. வாகனங்களின் இடையூறால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும்.- கண்ணன், வால்பாறை.

அத்துமீறும் வாகனங்கள்

பொள்ளாச்சி, ஜமீன் முத்துாரில் இருந்து, நல்லிக்கவுண்டன்பாளையம் செல்லும் ரோட்டில், கல்குவாரியில் இருந்து லோடு ஏற்றி வரும் டிப்பர் லாரிகள், வேகமாக இயக்கப்படுகின்றன. ஜல்லி, எம்.சாண்ட் எற்றி செல்லும் போது, வலை கட்டாததால், பின் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.- ராஜன், ஜமீன் முத்துார்.

திறப்பது எப்போது?

உடுமலை பைபாஸ் ரோட்டில், நகராட்சி பொது கழிப்பறை புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பொதுக்கழிப்பறையை நகராட்சியினர் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கந்தசாமி, உடுமலை.

விபத்து அபாயம்

பொள்ளாச்சி, உடுமலை ரோட்டில் மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி பஸ் ஸ்டாப் பகுதியில், நடைபாதை மேம்பாலம் பயன்பாடின்றி உள்ளது. இந்நிலையில், ரோட்டை கடந்து செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். அங்கு, சிக்னல் அமைக்க வேண்டும், அல்லது நடைபாதை மேம்பாலத்தை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.- ரத்தினம், பொள்ளாச்சி.

கேமரா கண் விழிக்குமா?

பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி செல்முத்து நகர் பகுதியில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் பல கேமராக்கள் சரிவர இயங்குவது இல்லை. இதனால், புதிய நபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு இல்லா நிலை உள்ளது. கேமராக்களை சீரமைக்க வேண்டும்.-- ஜீவானந்தம், செல்லமுத்து நகர்.

கழிப்பிடம் தேவை

வால்பாறை அடுத்துள்ள, கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் அதிகளவில் பனி படர்வதால், சுற்றுலா பயணியர் அங்கு நின்று இயற்கையை ரசித்து செல்கின்றனர். ஆனால், அங்கு கழிப்பிட வசதியில்லை. சுற்றுலா பயணியர் நலன் கருதி நகராட்சி சார்பில் கழிப்பிடம் கட்ட வேண்டும்.-- சந்துரு, வால்பாறை.

சாக்கடை அடைப்பு

பெரியநெகமம் - தாராபுரம் ரோட்டில், எஸ்.கே.எஸ்., பேக்ஸ் எதிரில், கழிவுநீர் கால்வாய் உள்ளது. கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, கால்வாயில் செல்ல முடியாத வகையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கேயே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கவுதமன், மூட்டாம்பாளையம்.

சுகாதாரம் பாதிப்பு

உடுமலை சிங்கப்பூர் நகரில் கழிவுகள் திறந்த வெளியிலும், சாக்கடை கால்வாய்களிலும் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. கொசுக்கடியால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.- வேல்முருகன், உடுமலை.

துார்வார வேண்டும்

உடுமலை மாரியம்மன் கோவில் எதிரில், சாக்கடை கால்வாய் துார்வாரப்படாததால், கழிவுகள், தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை நகராட்சியினர் துார்வார வேண்டும்.- ஆனந்த கிருஷ்ணன், உடுமலை.

நீரின்றி காயும் செடிகள்

தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் சென்டர்மீடியனில் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிற்கு முறையாக தண்ணீர் ஊற்றாததால், செடிகள் காய்ந்து வருகின்றன. எனவே, அச்செடிகளை காப்பாற்ற நகராட்சியினர் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவக்குமார், உடுமலை.

புதர்செடிகளை அகற்றணும்

உடுமலை, ஏரிப்பாளையம் பெண்களுக்கான விடுதி அருகே புதர் செடிகள் வளர்ந்துள்ளது. காலியிடத்தில் குப்பைக்கழிவுகள் குவிக்கப்படுகின்றன. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், அச்சத்தில் உள்ளனர். அவற்றை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.- ராஜேஸ்வரி, ஏரிப்பாளையம்.

உயர் மின்விளக்கு தேவை

உடுமலை, மலையாண்டிகவுண்டனுாரிலிருந்து ஜி.என்., பாளையம் செல்லும் ரோட்டில் உயர்மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோருக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட துாரத்தில் மின்விளக்குகள் அமைப்பதற்கும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.- உமா, ஜி.என்.பாளையம்.

தெருநாய்கள் தொல்லை

உடுமலைப்பேட்டை நகராட்சி 15 வார்டுக்குட்பட்ட தங்கம்மாள் ஓடை பகுதியில், தெருநாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், மாணவ மாணவியர் பள்ளிக்கூடம் செல்வதற்கும் பெண்கள் மற்றும் பொது மக்கள் சாலையில் நடந்து செல்லவும் அச்சப்படுகின்றனர். மேலும் அவ்வப்பொழுது சாலை விபத்துக்களும் நடக்கும் அபாயம் உள்ளது.- மோகன்ராஜ், தங்கம்மாள் ஓடை.

எப்ப ரோடு போடுவாங்க!

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, 4வது வார்டு, பழைய பஞ்சாயத்து ஆபீஸ் வீதியில் புதிதாக தார் சாலை அமைப்பதற்காக, இரு மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இன்னும் சாலை அமைக்கவில்லை. நடந்து செல்லும் மக்களும், இருசக்கர வாகன ஓட்டுநர்களும் அவதிப்படுகிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் விரைவாக தார் சாலை அமைக்க வேண்டும்.- நரிமுருகன், சூளேஸ்வரன்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை