உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்தியாவில் அதிக யானை - மனித மோதல் உள்ள பகுதி கோவை! நிரந்தரத் தீர்வு காண கலெக்டரிடம் கோரிக்கை 

இந்தியாவில் அதிக யானை - மனித மோதல் உள்ள பகுதி கோவை! நிரந்தரத் தீர்வு காண கலெக்டரிடம் கோரிக்கை 

-நமது நிருபர்-நாட்டிலேயே யானை-மனித மோதல் அதிகமுள்ள பகுதியாக கோவை மாறியிருப்பதால், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்று, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இயற்கை விவசாயி ஜெயப்பிரகாஷ், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:ஹார்வர்டு பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் கடந்த ஆண்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, 2006 லிருந்து 2018 வரையிலான 13 ஆண்டுகளில், இந்தியாவிலேயே அதிகளவு யானை-மனித மோதல் நடந்துள்ள பகுதியாக கோவை அடையாளம் காணப்பட்டுள்ளது.ஆனால் கடந்த 2018 க்குப் பின்பு, விளைநிலங்களில் காட்டு யானைகள் ஊடுருவுவது மிகவும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில், வனத்துறையின் வாட்ஸ்ஆப் குழுதகவல்படி, ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 5 லிருந்து 10 ஊடுருவல்கள் நடக்கின்றன.இதன்படி, ஆண்டுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான முறை, யானைகளால் பயிர்ச் சேத நிகழ்வுகள் நடக்கின்றன. உலகில் வேறு எந்தப்பகுதியிலும் இந்த அளவுக்கு, யானைகளால் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை.

147 பேர் உயிரிழப்பு

வனத்துறை புள்ளி விபரப்படி, கடந்த 2011 லிருந்து 2022 வரையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே பலியாகியுள்ளனர். அதேபோல, பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்ததில், 109 யானைகள், மனிதர்களின் நடவடிக்கைகளால் உயிரிழந்துள்ளன.கோவை, போளுவாம்பட்டி வனச்சரகங்களில், வாழை மற்றும் தென்னை பயிரிட்டுள்ள விளைநிலங்களில், யானைகள் ஊடுருவலின் பாதிப்பு அதிகமாகவுள்ளது.விவசாயிகளின் இழப்பு 10 கோடி ரூபாய்க்கும் அதிகம் இருக்கும் நிலையில், கடந்த 2022ம் ஆண்டில், வனத்துறை ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.யானை - மனித மோதலுக்கு, இப்பகுதியின் இயற்கை அமைப்பு, தாவர வகைகள், சமூகப் பொருளாதாரம், சமூக ரீதியான மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்வு காண வேண்டும்.அரசும், வன உயிரினப் பாதுகாவலர்களும், உள்ளூர் மக்களுடன் ஆலோசிக்க வேண்டும். விரைவானஎச்சரிக்கை முறைகள், காப்பீடு திட்டங்கடளை அறிமுகப்படுத்த வேண்டும்.சமூகரீதியான இயற்கை வள நிர்வாக முறையை மேம்படுத்த வேண்டும்; இப்பகுதியிலுள்ள தொழில், வணிகம் மற்றும் விவசாய முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.இப்போது இருப்பதை விட, வனத்துறையினர், கிராம மக்கள், வன உயிரின ஆர்வலர்கள் எல்லோரையும் கொண்ட, விரைவான மீட்புக்குழுக்களை அமைக்க வேண்டும். இதுவே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு தரும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

யானைக்கே 'பெரிய' பங்கு!

காட்டுப்பன்றி உள்ளிட்ட மற்ற வன உயிரினங்களைக் காட்டிலும், யானைகளால் 600 மடங்கு அதிகமான அளவில் பயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மனித-வன உயிரின மோதலால், ஆண்டுக்கு ஒரு மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் அழிக்கப்படுகின்றன. அதிலும் யானைகளால் விவசாயிகளின் ஆண்டு வருவாயில், ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்படுகிறது.இந்த மோதலால்400 மனிதர்கள் இறக்கின்றனர்; நுாறு யானைகள் பலியாகின்றன.மனிதர்கள் உயிரிழப்பில் 12.4 சதவீதம் பேர், யானைகளால் இறக்கின்றனர். அதை விட அதிகமாக 24.7 சதவீதம் யானைகளும் பலியாகின்றன. எனவே, யானை-மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியமாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை