கோவை : திட்டத்தில் மாறுதல் செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால்,
தபால் துறை சார்பில் முகவரிச் சான்று வழங்கும் பணி
நிறுத்தப்பட்டுள்ளது.தபால் துறை சார்பில், முகவரிச்சான்று அட்டை வழங்கும்
திட்டம், நாடு முழுவதும் சில ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. இதன்படி, 10
ரூபாய் கொடுத்து தலைமை தபால் அலுவலகத்தில் விண்ணப்பம் வாங்கி, விபரங்களை
பூர்த்தி செய்து, 240 ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு
விண்ணப்பித்தால், அடுத்த சில நாட்களில் தபால் துறை ஊழியர் ஒருவர் வீடு தேடி
வந்து விசாரித்து, முகவரியை உறுதி செய்வார். அதன் அடிப்படையில்,
விண்ணப்பதாரருக்கு இரண்டு மாதங்களுக்குள் தபால் முகவரிச்சான்று அட்டை
வழங்கப்படும். வைத்திருப்பவர் கையெழுத்துடன் அவரது போட்டோவும் இடம்
பெற்றுள்ள இந்த சான்று அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான்
கார்டு, பாஸ்போர்ட் என்று எந்த அடையாள ஆவணமும் இல்லாத ஒருவருக்கு,
வசதியானதாக இருந்தது.மாணவர்கள், அடிக்கடி பயணம் செய்வோர், சுற்றுலா பயணிகள்
போன்றோர், தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்கான ஆவணமாக இந்த அட்டையை
பயன்படுத்திக்கொள்ள முடியும். மூன்று ஆண்டு காலம் செல்லத்தக்க இந்த அடையாள
அட்டையை புதுப்பிக்க 140 ரூபாயும், 'டூப்ளிகேட்' அட்டை பெறுவதற்கு 90
ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.மத்திய, மாநில அரசு
அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், அடையாளச்சான்றாக இந்த தபால்
முகவரிச்சான்று அட்டை பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இத்திட்டத்தை
மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன் முதல் கட்டமாக,
நடைமுறையில் இருக்கும் தபால் முகவரிச்சான்று வழங்கும் திட்டத்தை
நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு, ஆக.,1ல் அனைத்து
தபால் அலுவலகங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டு விட்டது.முகவரிச்சான்று
விண்ணப்பம் கோரி வருவோரிடம், 'உயர் அதிகாரிகள் உத்தரவுபடி, திட்டம்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு பிறகே, சான்று அட்டை
திட்டம் குறித்து சொல்லமுடியும்' என்று கூறி, அனுப்பி வைக்கின்றனர், தபால்
ஊழியர்கள்.முகவரிச்சான்று திட்டம் மாற்றி அமைக்கப்படும்போது, அதில் புதிய
தகவல்களை சேர்க்கவும், தற்போதுள்ள 250 ரூபாய் என்ற கட்டணத்தை குறைக்கவும்
வாய்ப்புள்ளதாக தபால் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 'முகவரிச்சான்று கோரி,
ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு சான்று வழங்கப்படும்' என்றும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.