கோவை;கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் வரைவு வெளியிடப்பட்டதும், அதைப் பார்த்து ஆலோசனை வழங்குவதற்கு, பல்வேறு அமைப்புகளும் தயாராகி வருகின்றன.கோவை மாநகருக்கான புதிய மாஸ்டர் பிளான், 30 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்படவுள்ளது. இதற்கான வரைவை வெளியிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள், இதை மக்கள் பார்வைக்கு வைப்பதற்கு நகர ஊரமைப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது. முன்பு புத்தகம், 'சிடி' வடிவில் வெளியிடப்பட்ட இந்த வரைவு, இப்போது புதிய வடிவில் வெளியாகவுள்ளது. 'கியூ ஆர் கோடு'
இதற்காக, பிரத்தியேக இணையதளம் திறக்கப்பட்டு, அதில் பதிவேற்றப்படவுள்ளது. மக்கள் கூடுமிடங்களில் 'க்யூ ஆர் கோடு' வைத்து, அதை 'ஸ்கேன்' செய்து, வரைவைப் படிப்பதற்கான ஏற்பாட்டையும் இத்துறையினர் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக இதை வலியுறுத்தி வந்த தொழில் அமைப்பினர், இந்த வரைவு வெளியிடும் நாளை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதிலுள்ள அம்சங்களைப் பார்த்து, தங்கள் தரப்பு ஆலோசனைகளை வழங்கவும், சில ஆட்சேபங்களைப் பதிவு செய்யவும் பல அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதற்கேற்ப, புதிய மாஸ்டர் பிளான் வரைவில், கோவைக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. புதிய திட்டங்கள்...
கோவையில் 39 கி.மீ., துாரத்துக்கு, இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய மாஸ்டர் பிளானில், உக்கடம்-கணியூர், உக்கடம்-சாய்பாபா காலனி-பிளிச்சி, தண்ணீர்ப்பந்தல்-சிங்காநல்லுார்-காரணம்பேட்டை, கணேசபுரம்-காந்திபுரம்-காருண்யா நகர், உக்கடம்-வெள்ளலுார் பஸ் முனையம் என ஐந்து வழித்தடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெள்ளலுார், நீலம்பூர், வெள்ளமடை ஆகிய இடங்களில், பெரிய பஸ் முனையங்கள், துடியலுார், நீலம்பூர்-சின்னியம்பாளையம் இடையே, பெரியநாயக்கன்பாளையம் வீட்டு வசதி வாரிய இடம், பேரூர் செட்டிபாளையம், வடவள்ளி, மதுக்கரை, குரும்பபாளையம் ஆகிய இடங்களில் இன்டர்சிட்டி பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பஸ்களுக்கு, சங்கம்பாளையத்தில் பஸ் முனையம், கருமத்தம்பட்டி, போளுவாம்பட்டி, மதுக்கரை, சூலுார், மலுமிச்சம்பட்டி, நரசிம்மநாயக்கன் பாளையம், கோவில் பாளையம் ஆகிய இடங்களில் சரக்கு முனையங்கள், ராசிபாளையம், செட்டிபாளையம் மற்றும் இருகூரில் 'மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்' திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.கோவையுடன் இணையும் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளை (என்.எச்.:181, 948, 544, 81 மற்றும் 83) ஒருங்கிணைத்து, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், 200 அடி அகலத்தில் பை-பாஸ் ரோடு, கோவை நகரிலுள்ள எட்டு குளங்களையும் இணைக்கும் பசுமை வழி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இவற்றைத் தவிர்த்து, கோவையின் பல்வேறு தேவைகளைப் பட்டியலிட்டு, பல விதமான ஆலோசனை வழங்கவும் அமைப்புகள் தயாராகி வருகின்றன. அதேபோல, திட்டச்சாலைகளைக் கைவிடுவது, பொது ஒதுக்கீட்டு இடங்களை மனைப்பிரிவாக மாற்ற அனுமதிப்பது போன்றவற்றுக்கு எதிராக, கடும் ஆட்சேபங்களைத் தெரிவிக்கவும் சில அமைப்புகளின் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.திட்டங்களும், திட்டச்சாலைகளும் கணினியிலும் காகிதத்திலும் இருந்தால் போதாது என்பதை தமிழக அரசு உணர்ந்தால் நல்லது.