| ADDED : டிச 03, 2025 07:30 AM
அன்னுார்: படிவம் நிரப்ப சந்தேகம் கேட்கும் வாக்காளர்களுக்கு வழிகாட்ட முடியாமல் சத்துணவு சமையலர்கள் திணறுகின்றனர். அன்னுார் ஒன்றியத்தை உள்ளடக்கிய அவிநாசி தொகுதியில், 313 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 2 லட்சத்து 96 ஆயிரத்து 817 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 244 வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மாலை வரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 850 படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 72.38 சதவீத படிவங்கள் இதுவரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'சில இடங்களில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக சத்துணவு மைய சமையலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் வாக்காளர்களிடம் படிவம் நிரப்ப தேவையான விவரங்களை தெரிவிக்க முடிவதில்லை. சந்தேகங்களை தீர்க்க முடிவதில்லை. மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் தங்கள் சொந்த பணத்தில் படித்த பெண்களை தங்கள் உதவிக்கு வேலைக்கு வைத்துள்ளனர். அரசு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிக்கு ஆசிரியர்களை மட்டும் நியமித்திருக்கலாம். ஆனால் சத்துணவு சமையலர்களை நியமித்து, சமையலர்கள் சத்துணவு சமைத்தல், வாக்காளர் படிவங்களை விநியோகித்தல், திரும்ப பெறுதல், நிரப்புவதற்கு வழி காட்டுதல் என திண்டாடுகின்றனர். இவ்வாறு கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.