மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை கல்வி வட்டாரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெளிமாநில மாணவ, மாணவிகள் 56 பேர் ஆர்வமுடன் தமிழ் கற்று சரளமாக பேசியும், படித்தும் வருகின்றனர். காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், 144 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் அருகில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த, 56 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து, இங்கு பணிக்கு வரும் கூலித் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி, பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், வெளிமாநில குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க, ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர். காரமடை கல்வி வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் அசாம், ஹரியானா, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா, பீகார், ஜார்கண்ட் என வெளிமாநில குழந்தைகள், 56 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ் மொழியை, எதிர்பார்த்ததை விட விரைவாக கற்று வருவதாக கூறுகிறார், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ். அவர் கூறியதாவது:-வெளிமாநில குழந்தைகளை கண்டறிந்து, அவர்களது பெற்றோர்களிடம் தமிழக அரசின் திட்டங்களை விளக்குகிறோம். கல்விக்கான கட்டணம் எதுவும் இல்லை என, எடுத்துக் கூறி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வைத்தோம். இந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் வாயிலாக, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. தமிழ் பாடத்திட்டங்களை புரிய வைத்து, அதன் பின் ரெகுலர் வகுப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர். பல குழந்தைகள், தமிழ் மொழியை ஆர்வமாக கற்கின்றனர். ஆரம்பத்தில் தமிழ் கற்க கஷ்டப்பட்ட குழந்தைகள், தற்போது தமிழ் மொழியை நன்கு கற்று வருகின்றனர். நாம் சொல்வதை புரிந்து கொண்டு, படிக்கவும், எழுதவும் செய்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.