உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆக்கிரமிப்பின் பிடியில் பூ மார்க்கெட் ரோடு

 ஆக்கிரமிப்பின் பிடியில் பூ மார்க்கெட் ரோடு

கோவை: கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பூ மார்க்கெட், 'நமக்கு நாமே' திட்டத்தில், மாநகராட்சியும், மார்க்கெட் வியாபாரிகளும் இணைந்து நிதி ஒதுக்கி, கடைகளை புதுப்பித்தனர். அங்குள்ள வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டது. முன்புறத்தில் கடையை எடுத்தவர்கள், 20 அடி வரை ரோட்டை ஆக்கிரமித்து, கூடாரத்தை நீட்டித்துள்ளனர். ரோட்டை ஆக்கிரமித்திருப்பதோடு, மலர் மாலைகளை தொங்க விட்டு, வியாபாரம் செய்து வருகின்றனர். பூக்கடைகள் மட்டுமின்றி, பூஜை பொருட்கள் விற்பனை செய்வோர், மண் பானைகள் விற்போரும் ரோட்டை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்து வருகின்றனர். இதே போல எதிர் திசையில் உள்ள, மலர் சந்தை வளாகத்துக்கு முன்புறம் ரோட்டை ஆக்கிரமித்து வரிசையாக பூக்கடைகள், மண் பாண்ட பொருட்கள் விற்கும் கடைகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் ரோட்டில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. ரோடு விசாலமாக இருந்தாலும், இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். ரங்கே கவுடர் வீதியில் இருந்து பூ மார்க்கெட்டை கடந்து, வடகோவைக்கு செல்வதற்குள் ஒரு வழியாகி விடுகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அடுத்த படியாக, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மீதமுள்ள ரோட்டில் வாகனங்கள் செல்கின்றன. ஸ்டாப்பில் பஸ்கள் நிற்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. பொதுமக்களின் கோபம் போக்குவரத்து போலீஸ் மீதும், மாநகராட்சி அதிகாரிகள் மீதும் திரும்புகிறது. அவர்களுக்கும் இது தெரியும். ஆனால், ஆளும் கட்சி பிரமுகர்களின் தலையீட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயங்குகின்றனர். அரசியல் செல்வாக்கிற்கு அடிபணியாமல் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். ரோட்டை மீண்டும் ஆக்கிரமித்தாலோ அல்லது கடைக்காரர்கள் தங்களது கடையின் கூடாரத்தை நீட்டித்தாலோ, ரோட்டில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''பூ மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை