உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விடிய விடிய நடந்த இரணியன் தெருக்கூத்து

விடிய விடிய நடந்த இரணியன் தெருக்கூத்து

மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே விடிய விடிய நடந்த, இரணியன் தெருக்கூத்தை, கொட்டும் பனியிலும் பொதுமக்கள் கண் விழித்து கண்டு ரசித்தனர்.சிறுமுகை அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையத்தில் இரணியன் தெருக்கூத்து நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, இந்த தெருக்கூத்து இரவு துவங்கி, விடிய விடிய நடைபெறும். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு இரணியன் தெருக்கூத்து துவங்கியது.முதலில் விநாயகர், அவரைத் தொடர்ந்து கோமாளிகள், அடுத்து இரணியன், நாரதர், நீலாவதி, எமதர்மன், பிரகலநாதன், நரசிம்மர் என, 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள், வேடமிட்டு தெருக்கூத்தில் ஆடிப்பாடினர்.நெசவுத் தொழிலாளி முதல், தனியார் மற்றும் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் இந்த தெருக்கூத்தில்நடித்தனர்.ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பட்டதாரிகள் பிரசாத், கார்த்திக் ஆகியோர் பிரகலநாதன்களாக நடித்தனர். இளைஞர்கள் மோகன வருணன், பார்த்திபன், செந்தில்குமார் ஆகிய மூவர் இரணியன் வேடம் அணிந்து நடித்தனர்.இதுகுறித்து நாடக ஆசிரியர் கோவிந்தராஜ் கூறியதாவது: எங்கள் முன்னோர்கள் சுமார், 300 ஆண்டுகளுக்கு மேலாக, இரணியன் தெருக்கூத்தை ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் முதல் தேதி நடத்தி வந்தனர். அக்காலத்தில் கிராமங்களில் மக்களை பாதித்த, கொடிய நோயை குணமாக்க, இரணியன் நாடகம் நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து பாரம்பரியமாக இந்த கலை அழியாமல் இருக்க, நாங்களும் நடத்தி வருகிறோம்.இக்கலையை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, அவர்களை இதில் பங்கேற்க செய்து வருகிறோம். அவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். தெருக்கூத்தின் இறுதியில் பெருமாளின் அவதாரமான நரசிம்மர், தூணில் இருந்து வெளியே வந்தார். அப்போது நரசிம்மரை பார்த்தவுடன், கடவுளாக நினைத்து மக்கள் கையெடுத்து வணங்கினர்.பின்னர் இரணிய மகாராஜனை, நரசிம்மர் வதம் செய்த பின், பிரகலநாதனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது மக்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். கொட்டும் பனியிலும் விடிய விடிய, மக்கள் நாடகத்தை கண்டு ரசித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை