உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தெருவிளக்குகள் இன்றி மக்கள் திக்...திக்...!

 தெருவிளக்குகள் இன்றி மக்கள் திக்...திக்...!

கோ வை மாநகராட்சி மேற்கு மண்டலம், 39வது வார்டுக்கு உட்பட்ட சுண்டப்பாளையம், அஜ்ஜனுார், லிங்கனுார், மஹாராணி லே-அவுட், கீர்த்தி நகர், கணேஷ் நகர், வேம்பு அவென்யூ, சத்யா காலனி, சின்மயா நகர், சத்தி நகர், ஜி.கே.எஸ். அவென்யூ உள்ளிட்ட இடங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக, தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். கொசு தொல்லை, சுவாச கோளாறு பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக, மக்கள் குமுறுகின்றனர். ஆளுங்கட்சி கவுன்சிலர் என்பதால், வார்டில் ஒரு பிரச்னையும் இருக்காது என நினைத்தால், தலைகீழாக உள்ளது. இது குறித்து கேட்டால், செய்த பணிகளைதான் முதலில் அடுக்குகிறார் கவுன்சிலர் லட்சுமி. சோலார் லைட் எங்கே? டாடா நகர், ராஜமாதா நகரில் இருக்கும், 19.5 சென்ட் 'ரிசர்வ் சைட்' இடத்தில் பார்க் அமைக்க, 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். 12 நாட்களுக்கு ஒருமுறைதான் வருகிறது. அதுவும் ஒரு மணி நேரம் மட்டும் திறக்கப்படுகிறது. ரிசர்வ் சைட் அருகே இருந்த சோலார் மின் விளக்கை, திரும்ப கொண்டு வருவதாகக்கூறி மாநகராட்சி பணியாளர்கள் கழற்றி சென்றுவிட்டனர். இருளில் தவிக்கிறோம். -ஜான் சவுந்தர் பாண்டியன், இயற்கை இடுபொருள் விற்பனையாளர்.பொறுப்பு இல்லை சத்யா காலனியில் இருந்து நாகராஜபுரம் குளத்துடன், இணையும் கால்வாயில் வெளியில் இருந்து வருபவர்கள் குப்பை, பழைய மெத்தை, சோபா போன்றவற்றை வீசி செல்கின்றனர். கேள்வி கேட்டால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். நாம் பொறுப்பற்று செயல்பட்டுவிட்டு அரசை குறைகூறி என்ன பயன். மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறு குப்பை கழிவு வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். கால்வாயின் கிழக்கே பக்கவாட்டு சுவர் எழுப்ப வேண்டும். -ஆராதனா விவசாயிபடர்ந்த பார்த்தீனியம் சிறுவாணி ரோடு மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். டாடா நகர், மஹாராணி அவென்யூ, சிறுவாணி வீதி, கண்ணப்ப நகர் உள்ளிட்ட இடங்களில் பார்த்தீனியம் செடி படர்ந்துள்ளது. அவை அகற்றப்படாததால் தும்மல், சளி போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. சாக்கடை அடைப்பும் ஏற்பட்டுள்ளதால், பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். - மகேஷ் தனியார் நிறுவன ஊழியர்.காட்டு பன்றிகள் நடமாட்டம் ராஜமாதா நகரில் குப்பையை சாக்குகளில் கட்டி வைத்துவிடுகின்றனர். அதை நாய்கள் கடித்து குதறுவதால் குப்பை சிதறி துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள காலியிடங்கள் புதர்மண்டி கிடப்பதால் மாலை நேரங்களில் வரும் காட்டு பன்றிகள், குட்டிகளுடன் அதற்குள் பதுங்கிக்கொள்கின்றன. குழந்தைகளை வெளியே விடமுடியவில்லை. தெரு விளக்கு வசதிகள் இல்லாததால் இருள் சூழ்ந்துகொள்கிறது. காட்டு பன்றிகள் எங்கிருந்து வருகிறது என்றே தெரிவதில்லை. -கிருஷ்ணராஜ், இன்ஜினியர்.

'பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்'

பொதுமக்களின் புகார்களை, வார்டு கவுன்சிலர் லட்சுமி(தி.மு.க.,) முன் வைத்தோம். அவர் கூறியதாவது: n சுண்டப்பாளையம், அஜ்ஜனுார், லிங்கனுார் உள்ளிட்ட இடங்களில் முன்பு மண் ரோடு மட்டுமே இருந்தது. நான் கவுன்சிலர் ஆனவுடன் மண் ரோடுகள் அனைத்தும் தார் ரோடாக மாற்றப்பட்டுவிட்டது. பாதாள சாக்கடை திட்ட பணிகள், 90 சதவீதம் முடிந்துவிட்டன; மீதமுள்ள, 10 சதவீத பணிகள் நடந்துவருகின்றன. n மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க, மஹாராணி அவென்யூவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நுாலகம் கட்டித்தரப்பட்டுள்ளது. சுண்டப்பாளையம், அஜ்ஜனுார், சத்யா காலனியில் ரூ.2 கோடிக்கும் அதிகமான செலவில், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. n முன்பு தொண்டாமுத்துாரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்லும் நிலை இருந்தது. தற்போது, சுண்டப்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளதால், 6 கி.மீ., அலையாமல் உள்ளூரிலேயே மருத்துவம் பார்க்க முடியும். வார்டில் எட்டு பொது கழிப்பிடங்கள் புனரமைக்கப்பட்டும், ஒரு கழிப்பிடம் புதிதாக கட்டப்பட்டும் உள்ளன. n காட்டு பன்றி பிரச்னை தொடர்பாக, வனத்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். டாடா நகர், ராஜமாதா நகரில் தெரு விளக்குகள் அமைக்கக்கோரி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் வழக்கு காரணமாக 'ரிசர்வ் சைட்' இடத்தில் எந்த வசதியும் ஏற்படுத்த முடியாத நிலை உள்ளது. வழக்கு முடிந்தவுடன் 'பார்க்' அமைத்து தரப்படும். n வார்டில் குப்பை அள்ளுவதற்கு, ஒப்பந்த பணியாளர்கள் நிறைய பேர் உள்ளனர். சாக்கடை அள்ளுவதற்கு ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருக்கிறார். இதனால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை கழிவு அகற்ற, துாய்மை பணியாளர்களை அதிகரிக்க வேண்டும். n பார்த்தீனியம் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொறுப்பை உணர்ந்து, கால்வாயில் குப்பை கழிவு கொட்டுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். வார்டுகளில் இருக்கும் இதர பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை