உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காடுக்கு நீட்டிக்க திட்டம்

உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காடுக்கு நீட்டிக்க திட்டம்

கோவை-பெங்களூரு இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை, பாலக்காடு வரை நீட்டிக்கப்படவுள்ளதாகப் பரவியுள்ள தகவல், கோவை மக்களிடம் கடும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கோவை-பெங்களூரு இடையே, உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு மாறாக, பகல் நேர ரயிலாக இது இயக்கப்படுகிறது.இந்த ரயில், காலை 5:45 மணிக்கு, கோவையில் புறப்படும் நிலையில், இதற்கு முன்பாக, காலை 5:00 மணிக்கு, பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் புறப்படுகிறது.இந்நிலையில், உதய் ரயிலில், கடந்த வாரத்தில் ஒரு ஏ.சி.,பெட்டி கூட்டப்பட்டு, சென்னை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுடன், 'ரேக் ஷேரிங் அரேஞ்ச்மென்ட்' செய்யப்பட்டது. அப்போதே இந்த ரயிலை நீட்டிக்க முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்தது.அதற்கேற்ப, வரும் பிப்.,15 லிருந்து, இந்த ரயிலின் பராமரிப்பு, சென்னை பேசின் பிரிட்ஜ் பராமரிப்பு மையத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு வரை நீட்டிக்க திட்டம்?

இதன் தொடர்ச்சியாக, கோவையிலிருந்து புறப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை, கேரள மாநிலம் பாலக்காடு வரை நீட்டிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.தெற்கு ரயில்வேயில் இரண்டாம் நிலையிலுள்ள கேரள அதிகாரிகள் சிலர், 'டெக்னாலஜி'யை காரணம் காட்டி, பாலக்காடுக்கு நீட்டிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.கோவையிலிருந்து பெங்களூருக்கு நிறைய ரயில் தேவைகள் இருக்கும் நிலையில், ஏற்கனவே சென்னை-பெங்களூரு இணைப்பு ரயில் (ஸ்லீப்பர் கோச்சுகள்) சொரனுார்-கொச்சின் ஹார்பர் டெர்மினல் ரயில் பாதை போட்டவுடன் அங்கு நீட்டிக்கப்பட்டது.இங்கிருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலையும், எர்ணாகுளம் வரை நீட்டித்தது தெற்கு ரயில்வே. அதற்குப் பதிலாக, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை, பாலக்காட்டிலிருந்து கோவை வரை நீட்டிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதுவும் இதுவரை செய்யப்படவில்லை.இந்நிலையில், இந்த ரயிலையும் கேரளாவுக்கு நீட்டிக்கப்போவதாகப் பரவியுள்ள தகவல், கோவை மக்களிடம் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விஷயத்தில், ரயில்வே வாரிய அதிகாரிகள் தலையிட்டு, உதய் எகஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பை, தடுக்க வேண்டியது அவசர அவசியம்!

கடுமையாக எதிர்த்து போராட தயாராகும் ரயில் பயணிகள்

கோவையைச் சேர்ந்த ரயில் பயணிகள் அமைப்பினர் சிலர் கூறியதாவது:டபுள் டெக்கர், தோல்வியடைந்த ரயில் திட்டமாகும். ஆனாலும் கோவை மக்கள் வேறு வழியின்றி அதில் பயணம் செய்கின்றனர். அதில், டபுள் டெக்கர் பெட்டிகளில், குறைந்தபட்சம் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் நிரம்பிச் செல்கின்றன.புதிதாக இணைக்கப்பட்ட, இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 98 சதவீதம் நிரம்பி விடுகின்றன.இந்த ரயிலும், வந்தே பாரத் ரயிலும் அடுத்தடுத்து கிளம்புவதைக் காரணம் காட்டி, உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை நீட்டிக்க முயற்சி நடக்கிறது.இவ்விரு ரயில்களையும் ஒப்பிடுவது, எந்த வகையிலும் பொருத்தமில்லை. சென்னையிலிருந்து பெங்களூருக்கு, அடுத்தடுத்து நான்கு ரயில்கள் புறப்பட்டுச் செல்கின்றன. பாலக்காட்டிலிருந்து மதுரை மார்க்கமாக அடுத்தடுத்து, இரண்டு ரயில்கள் செல்கின்றன. ஆனால் இங்கிருந்து இரண்டு ரயில்கள், காலையில் புறப்படுவதைக் காரணம் காட்டுவது அபத்தமானது.கோவையிலிருந்து பெங்களூருக்கு, கூடுதல் ரயில்கள் தேவைப்படும் நிலையில், இருப்பதையும் இப்படி கேரளாவுக்கு நீட்டித்தால் கோவைக்கான ஒதுக்கீடு முற்றிலும் சரிந்து விடும். எனவே, நீட்டிப்பைத் தவிர்க்க வேண்டும். மீறி நீட்டித்தால் கடுமையாக எதிர்த்துப் போராடுவோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி